search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நிதி நிறுவன மேலாளரிடம் ரூ.2 லட்சம் வழிப்பறி: பணியாளர் உள்பட 3 பேர் கைது
    X

    கைதான அபிஷேக், பாஸ்கர் மற்றும் கண்ணன்.

    நிதி நிறுவன மேலாளரிடம் ரூ.2 லட்சம் வழிப்பறி: பணியாளர் உள்பட 3 பேர் கைது

    • நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்த கண்ணன் என்பவர் மீது சந்தேகம் ஏற்படவே அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது.
    • வசூலித்த பணத்துடன் மேலாளர் எந்த வழியில் வருவார்? என்று ஸ்கெட்ச் போட்டு கொடுத்து கொள்ளையடிக்க முடிவு செய்தனர்.

    உத்தமபாளையம்:

    கரூர் மாவட்டம் ஆத்தூர் புதூரைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 48). இவர் தேனி மாவட்டம் சின்னமனூர் சாமிக்குளம் பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் பரமசிவம் என்பவர் மேலாளராக உள்ளார்.

    சின்னமனூர் மற்றும் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வட்டிக்கு பணம் கொடுத்து அதனை வசூல் செய்வதற்காக பல ஊழியர்களையும் கணேசன் நியமித்துள்ளார். கணேசன் 2 மாதத்துக்கு ஒரு முறை நிதி நிறுவனத்துக்கு வந்து வரவு செலவு கணக்குகளை பார்த்து பணத்தை பெற்றுச் செல்வது வழக்கம்.

    சம்பவத்தன்று பைனான்ஸ் மேலாளர் பரமசிவம் மற்றும் ஊழியர் கண்ணன் ஆகியோர் வசூல் செய்த பணத்தை எடுத்துக் கொண்டு காமயகவுண்டன்பட்டியில் இருந்து நாராயணதேவன் பட்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர்.

    செல்லாயி அம்மன் கோவில் அருகே இவர்கள் நின்று கொண்டு இருந்த போது திடீரென வந்த ஒரு கும்பல் அவர்கள் மீது மிளகாய் பொடியை தூவி ரூ.2 லட்சம் பணம் மற்றும் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளையும் திருடிச் சென்றனர்.

    மிளகாய் பொடி தூவியதால் நிலை குலைந்து கீழே விழுந்த அவர்கள் அதன் பின்னர் ராயப்பன்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

    நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்த கண்ணன் என்பவர் மீது சந்தேகம் ஏற்படவே அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. அப்போது கண்ணன் தனது நண்பர்கள் 2 பேரை சேர்த்துக் கொண்டு வசூல் செய்த பணத்தை கொள்ளையடித்தது தெரிய வந்தது. வசூலித்த பணத்துடன் மேலாளர் எந்த வழியில் வருவார்? என்று ஸ்கெட்ச் போட்டு கொடுத்து கொள்ளையடிக்க முடிவு செய்தனர். பணம் அதிகம் இருக்கும் என்றும் எதிர்பார்த்த நிலையில் ரூ.2 லட்சமே கிடைத்ததால் ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.

    இதனைத் தொடர்ந்து போலீசார் கண்ணன் மற்றும் அவரது கூட்டாளிகளான கரூரைச் சேர்ந்த அபிஷேக் (36), வேலூரைச் சேர்ந்த பாஸ்கரன் (31) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் ரூ.2 லட்சம் மற்றும் மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×