என் மலர்

  தமிழ்நாடு

  ஈரோடு இடைத்தேர்தல்: ஓ.பி.எஸ்-விஜயகாந்த்-கமல்ஹாசன் 23-ந்தேதி முக்கிய ஆலோசனை
  X

  ஈரோடு இடைத்தேர்தல்: ஓ.பி.எஸ்-விஜயகாந்த்-கமல்ஹாசன் 23-ந்தேதி முக்கிய ஆலோசனை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக ஓ.பி.எஸ். முக்கிய முடிவுகளை வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
  • ஈரோட்டில் உள்ள அனைத்து சட்டமன்ற நிர்வாகிகளையும் கமல் சென்னைக்கு அழைத்து உள்ளார்.

  சென்னை:

  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க. கூட்டணியில் களம் இறங்கும் காங்கிரசை எதிர்த்து அ.தி.மு.க. போட்டியிடும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளுமே தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளன.

  அ.தி.மு.க.வில் இருந்து நீக்கி வைக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக தானே நீடிப்பதாக கூறிக்கொண்டு நிர்வாகிகளையும் அவர் நியமித்துள்ளார்.

  ஈரோடு கிழக்கு தொகுதியில் எந்த மாதிரியான நிலைப்பாட்டை எடுப்பது என்பதில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தெளிவான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். கொங்குமண்டலத்துக்குட்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதி எடப்பாடி பழனிசாமிக்கு செல்வாக்கு மிக்க தொகுதியாகவே கருதப்படுகிறது.

  2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் காங்கிரசிடம் சுமார் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலேயே அ.தி.மு.க. தோற்றுப்போய் இருந்தது. இதனால் இந்த முறை எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணத்தில் எடப்பாடி அணி களம் இறங்கி உள்ளது.

  அதற்கு பதிலடி கொடுக்க ஓ.பி.எஸ். அணியினர் திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக அ.தி.மு.க. தலைமை கழகம் என்கிற பெயரில் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வருகிற 23-ந்தேதி ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்கும் இந்த கூட்டத்தில் ஓ.பி.எஸ். பங்கேற்று முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார்.

  வருகிற 23-ந்தேதி மாலை 6 மணி அளவில் எழும்பூர் அசோகா ஓட்டலில் நடைபெறும் இந்த கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் எந்த மாதிரியான முடிவை எடுப்பது? என்பது பற்றி விரிவாக ஆலோசிக்கப்படுகிறது. இதில் ஈரோடு மாவட்ட நிர்வாகிகளும் பங்கேற்கிறார்கள்.

  இதன் பின்னர் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக ஓ.பி.எஸ். முக்கிய முடிவுகளை வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

  எந்த கூட்டணியிலும் இல்லாமல் தனியாக உள்ள தே.மு.தி.க.வும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக வருகிற 23-ந்தேதி முக்கிய ஆலோசனையை நடத்துகிறது. அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.

  கடந்த சட்டமன்ற தேர்தலின்போது சீட் விவகாரத்தில் ஏற்பட்ட மோதலால் கடைசி நேரத்தில் அ.தி.மு.க. கூட்டணியை விட்டு வெளியேறிய தே.மு.தி.க. வேறு வழியின்றி டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க.வுடன் கூட்டணி அமைத்து படுதோல்வியை சந்தித்தது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் எந்த கூட்டணியில் இடம்பெறுவது என்று அந்த கட்சி முடிவு எதையும் எடுக்காமல் இருக்கும் நிலையில்தான் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

  இதனால் தனித்து போட்டியிடுவதா? பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்து தாங்கள் விரும்பும் கூட்டணிக்கு இப்போதே ஆதரவை தெரிவிப்பதா? என்கிற குழப்பமான மனநிலையில் தே.மு.தி.க. உள்ளது. இதுபற்றி விரிவாக ஆலோசித்து பிரேமலதா முடிவை அறிவிக்க உள்ளார்.

  பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இடம்பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கும் நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரசை எதிர்த்து களம் இறங்க வேண்டுமா? என்கிற கேள்வியும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தர்மசங்கடமான சூழலை ஏற்படுத்தி உள்ளது.

  இதனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடலாமா? வேண்டாமா? என்பது பற்றி முடிவு எடுப்பதற்காக கமல்ஹாசன் ஆலோசனை கூட்டத்தை கூட்டியுள்ளார்.

  இது தொடர்பாக ஆலோசிக்க ஈரோட்டில் உள்ள அனைத்து சட்டமன்ற நிர்வாகிகளையும் கமல் சென்னைக்கு அழைத்து உள்ளார். 23-ந்தேதி அன்று காலை 11.30 மணி அளவில் நடைபெறும் கூட்டம் தொடர்பாக அக்கட்சியின் துணை தலைவர்கள் மவுரியா, தங்கவேலு ஆகியோர் அறிவிப்பு வெளியிட உள்ளனர்.

  இந்த கூட்டத்தில் அந்தியூர், பவானி, பவானி சாகர், கோபிச்செட்டிபாளையம், மொடக்குறிச்சி, ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, பெருந்துறை ஆகிய 8 சட்டமன்ற தொகுதியை சேர்ந்த மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

  இந்த கூட்டத்துக்கு பின்னர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முடிவு என்ன? என்பது பற்றி அறிவிக்கப்பட உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி 10 ஆயிரம் ஓட்டுகளை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

  Next Story
  ×