search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அமலாக்கத்துறை சோதனை.. விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் அமைச்சர் பொன்முடி
    X

    அமலாக்கத்துறை சோதனை.. விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் அமைச்சர் பொன்முடி

    • பொன்முடியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையின்போது திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • கணக்கில் காட்டப்படாத 70 லட்சம் ரூபாய் ரொக்கப்பணத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியதாக தகவல்.

    சென்னை:

    உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி. இவரது மகன் பொன் கவுதம சிகாமணி கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பி.யாக உள்ளார். அமைச்சர் பொன்முடியின் வீடு சென்னை சைதாபேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ளது. இங்கு காலை 6.50 மணியளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 பேர் கொண்ட குழுவினர் வந்தனர். அவர்கள் பொன்முடியின் வீட்டுக்குள் சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    இதேபோல் விழுப்புரத்தில் உள்ள பொன்முடியின் வீடு, அலுவலகம் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

    விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடியின் வீட்டில் அதிகாரிகள் சோதனையின்போது அவர்களிடம் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வங்கி பரிவர்த்தனை, பணப் பரிமாற்றம், நகை மதிப்பீடு தொடர்பாக வங்கி அதிகாரிகளை நேரில் வரவழைத்து விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி, பொன்முடியின் வீட்டுக்கு இந்தியன் வங்கி அதிகாரிகள் வந்து ஆய்வு செய்தனர். சோதனையின் முடிவில் பொன்முடியின் வீட்டில் இருந்து கணக்கில் காட்டப்படாத 70 லட்சம் ரூபாய் ரொக்கப்பணத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியதாகவும், ரூ.10 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகளும் கைப்பற்றியதாகவும் தகவல் வெளியானது.

    சென்னையில் நடந்த சோதனைக்குப்பிறகு சைதாப்பேட்டை வீட்டில் வைத்து அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணைக்கு பிறகு மேல் விசாரணைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவரது மகன் பொன் கவுதம சிகாமணியும் சென்றுள்ளார். விசாரணையின் முடிவில் பொன்முடி கைது செய்யப்படலாம் என்ற தகவலும் பரவி வருகிறது. இதனால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×