என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தண்ணீரை காய்ச்சி குடியுங்கள்: பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
- ஒரு சில நாட்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான உணவு, நீர் மற்றும் மருந்துகளை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்.
- மொட்டை மாடிகளில் இருந்து வேடிக்கை பார்க்கக் கூடாது. வாகனத்தில் வெளியே பயணிக்க கூடாது.
சென்னை:
புயல் மற்றும் கனமழையையொட்டி பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கான அறிவுறுத்தல்களை பேரிடர் மேலாண்மைத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
மழைக்காலத்தில் பொதுமக்கள் தங்கள் ஆரோக்கியத்தை பேணிக்காப்பது மிகவும் முக்கியமானதாகும். இதற்காக பொதுமக்கள் தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும். சுகாதாரமான உணவை மட்டுமே உண்ண வேண்டும்.
மேலும் பொதுமக்கள் அவரச உதவி பெட்டகத்தையும் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். அந்த உதவிப் பெட்டகத்தில் கயிறு, மெழுகுவர்த்தி, டார்ச் லைட், தீப்பெட்டி, பேட்டரிகள், பேண்ட் எய்ட், கத்தி, உலர்ந்த உணவு வகைகள், குடிநீர், மருந்துகள் மற்றும் குளுக்கோஸ் ஆகியவை இடம்பெற வேண்டும்.
புயல் கரையை கடக்கும் நேரத்தில் ஜன்னல், கதவுகளை மூடி வைக்க வேண்டும். ஒரு சில நாட்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான உணவு, நீர் மற்றும் மருந்துகளை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்.
விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் ஆவணங்களில் நீர் படாத வகையில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். புயல் கரையை கடக்கும்போது வெளியில் இருக்கும் பொதுமக்கள் அருகில் உள்ள பாதுகாப்பு மையத்திலோ, அல்லது பாதுகாப்பான கட்டிடத்திலோ தங்கி இருக்க வேண்டும்.
மொட்டை மாடிகளில் இருந்து வேடிக்கை பார்க்கக் கூடாது. வாகனத்தில் வெளியே பயணிக்க கூடாது. பழுதடைந்த கட்டிடத்தில் இருப்பதை தவிர்க்க வேண்டும். மரங்கள், மின்கம்பங்கள் மற்றும் மின் கம்பிகளுக்கு அருகில் நிற்க வேண்டாம். அறுந்து கிடக்கும் மின் கம்பிகளின் அருகில் செல்ல வேண்டாம். ஈரமாக இருக்கும்போது மின் சாதனங்களை உபயோகிக்க வேண்டாம். வீட்டின் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருப்பதோடு கிருமி நாசினிகளை தெளிக்க வேண்டும்.
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் முன்கூட்டியே நிவாரண மையங்களுக்கு செல்ல வேண்டும். புயல் தொடர்பாக எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வரும் வரை பொதுமக்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






