search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தி.மு.க. இளைஞரணி-மாணவரணி சார்பில் 50 லட்சம் பேரிடம் கையெழுத்து- உதயநிதி சனிக்கிழமை தொடங்கி வைக்கிறார்
    X

    தி.மு.க. இளைஞரணி-மாணவரணி சார்பில் 50 லட்சம் பேரிடம் கையெழுத்து- உதயநிதி சனிக்கிழமை தொடங்கி வைக்கிறார்

    • அனைவரின் கையெழுத்தையும் டிஜிட்டலாக பெற வேண்டும் என்பதுதான் நம்முடைய முழு இலக்கு.
    • சேலத்தில் டிசம்பர் 17-ந்தேதி அன்று நடைபெறும் இளைஞரணி மாநாட்டில் பங்கேற்க வருகை தரும் முதலமைச்சரிடம் 50 நாட்களில் பெறப்படும் கையெழுத்துகளை வழங்க இருக்கிறோம்.

    சென்னை:

    நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க. சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது.

    இதில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற மாணவர்களின் கல்வி உரிமைக்கான கழகத்தின் கோரிக்கையை நிறைவேற்ற ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தர வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று.

    நம்முடைய அரசு அமைந்த பிறகு, கடந்த ஆகஸ்டு 20-ந்தேதி நம்மு டைய எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் மாநிலம் தழுவிய மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி முடித்தோம். இந்த போராட்டம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

    அந்தப் போராட்டத்திலேயே நீட் தேர்வு எதிர்ப்பு போராட்டத்தை நாம் மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டு பேசியிருந்தேன். அதற்கான முன்னெடுப்பாக தான் வருகிற 21-ந்தேதி (சனிக்கிழமை) கையெழுத்து இயக்கத்தை நாம் தொடங்க உள்ளோம்.

    50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்களை பெறும் வகையில் நம் தமிழ்நாட்டு மக்களின் மனநிலையை இந்திய ஒன்றியத்துக்கு உணர்த்தும் வகையில் இந்த கையெழுத்து இயக்கம் இருக்க வேண்டும்.

    மக்களின் கையெழுத்துகளை பெறுவதற்காக 'போஸ்ட் கார்டு' மற்றும் இணையதளம் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஏனெனில் அனைவரின் கையெழுத்தையும் டிஜிட்டலாக பெற வேண்டும் என்பதுதான் நம்முடைய முழு இலக்கு.

    ஏனெனில் அதில் ஒவ்வொருவரும் கையெழுத்து இடஇட நீட் தேர்வுக்கு எதிராக எத்தனை பேர் கையெழுத்து போட்டுள்ளனர் என்ற கவுண்ட் டிஜிட்டலாக அந்த வெப்சைட்டில் தெரியும்.

    அதனால் உறுப்பினர் சேர்க்கைக்கு படிவங்களை எடுத்து செல்வதுபோல் ஐபாட், டேப்களை எடுத்துக் கொண்டு ஊர் ஊராக சென்று வீடு வீடாக ஏறி நாம் கையெழுத்து பெற வேண்டும்.

    கவுன்ட் காட்ட வேண்டும் என்பதற்காக இல்லாதவர்களின் பெயர்களை போலியாக எழுதி, ஏதோ 10 நம்பர்களை போன் நம்பர் என டைப் செய்வது போன்ற தவறான விஷயங்களை தயவு செய்து தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    சேலத்தில் டிசம்பர் 17-ந்தேதி அன்று நடைபெறும் இளைஞரணி மாநாட்டில் பங்கேற்க வருகை தரும் முதல்-அமைச்சரிடம் 50 நாட்களில் பெறப்படும் கையெழுத்துகளை வழங்க இருக்கிறோம். பிறகு முறைப்படி அறிவாலயத்தின் வழியாக, ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும்.

    50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துகள் என்று இலக்கு வைத்துள்ளோம். கல்லூரி முன்பு நின்று மாணவர்களின் கையெழுத்துகளை பெறலாம். ஒவ்வொரு மாவட்டத்திலும் கையெழுத்து இயக்க தொடக்க நிகழ்ச்சியை பொதுமக்கள், மாணவர்கள் அறியும் வகையில் சிறப்பாக செய்திட வேண்டும்.

    சென்னையில் கலைவாணர் அரங்கில் சனிக்கிழமை (21-ந்தேதி) கையெழுத்து இயக்கத்தை நான் தொடங்கி வைக்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கையெழுத்து இயக்கத்தை தி.மு.க. இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவர் அணி இணைந்து நடத்த உள்ளனர்.

    Next Story
    ×