என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பாராளுமன்ற தேர்தல்: தி.மு.க. விருப்ப மனு தாக்கல் நிறைவு
- தூத்துக்குடியில் போட்டியிட தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. விருப்ப மனு தாக்கல் செய்தார்.
- விருப்ப மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் அண்ணா அறிவாலயத்தில் கூட்டம் அலை மோதியது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து அண்ணா அறிவாலயத்தில் கடந்த 1-ம் தேதியில் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வந்தன.
தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தி.மு.க. தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா மற்றும் ஆஸ்டின் உள்ளிட்டோர் விருப்ப மனுக்களைப் பெற்று வந்தனர்.
இதில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. விருப்ப மனு தாக்கல் செய்தார். அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூர் தொகுதிக்கும், அமைச்சர் கே.என்.நேரு மகன் அருண் கரூர் தொகுதிக்கும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு டி.ஆர்.பாலுவும், தென்சென்னை தொகுதிக்கு கழக வர்த்தக அணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம், நெல்லை தொகுதிக்கு பாரத் ஸ்கேன்ஸ் நிறுவனர் டாக்டர் இம்மானுவேல், சபாநாயகர் அப்பாவு மகன் அலெக்ஸ் உள்பட பலர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், இன்று விருப்ப மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் அண்ணா அறிவாலயத்தில் கூட்டம் அலை மோதியது. ஏராளமான கட்சி பிரமுகர்கள் ஆதரவாளர்களுடன் வந்தி ருந்து விருப்ப மனு தாக்கல் செய்தனர்.
40 பாராளுமன்ற தொகுதிக்கும் சுமார் 2400-க்கும் மேற்பட்டவர்கள் அறிவாலயத்தில் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்






