search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விலகி வரும் கொரோனா அச்சம்- முககவசம் அணியத்தேவையா? வேண்டாமா?
    X

    முககவச வியாபாரி முருகேசன்.

    விலகி வரும் கொரோனா அச்சம்- முககவசம் அணியத்தேவையா? வேண்டாமா?

    • முககவசம் நோய் கிருமிகளிடம் இருந்து மட்டும் இல்லை காற்று மாசுவிடம் இருந்து நம்மை பாதுகாக்கிறது.
    • கொரோனா வீரியத்தில் இருந்தபோது ஒரு முறை பயன்படுத்தப்படும் முககவசம் அதிகம் விற்பனையானது.

    சீனாவில் உதயமான கொரோனா வைரஸ் கடந்த 2020-ம் ஆண்டு தமிழ்நாட்டில் ஊடுருவியபோது மக்கள் உயிர் பயத்தில் முககவசம் அணிதல், கிருமி நாசினி மூலம் கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற தற்காப்பு நடவடிக்கைகளை தாரக மந்திரம் போன்று கடைபிடித்தனர். ஒரே நேரத்தில் சிலர் 2 முககவசங்களை பயன்படுத்தினர்.

    முககவசம் அணியாமல் அலட்சியம் காட்டியவர்களிடம் அரசாங்கம் அபராத நடவடிக்கைகளை கையில் எடுத்தது. தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் கொரோனாவின் கொட்டம் அடங்கிப்போனாலும், இன்னும் முழுமையாக ஒழியவில்லை. தினந்தோறும் இந்த தொற்று பாதிப்பு இருந்து வருகிறது.

    இந்த தொற்று உயிர் பலி அதிகம் வாங்கிய நேரத்தில் கொரோனா என்ற பெயரை கேட்டாலே மக்கள் மத்தியில் பீதியும், அச்சமும் நிறைந்திருந்தது. தற்போது கொரோனாவின் வீரியம் குறைந்து போனதால் மக்கள் மத்தியில் அச்சமும் விலகி விட்டது. மேலும் மக்கள் அதிகம் கூடும் மெரினா கடற்கரை மற்றும் சுற்றுலாதலங்கள், தியாகராயநகர் உள்பட கடை வீதிகள், திரையரங்குகள், வணிக வளாகங்களில் முககவசம் கட்டாயம் என்ற கட்டுப்பாடுகள் கானல்நீராய் போனது. அரசின் அபராத நடவடிக்கைகளும் அடங்கிப்போனது. இதனால் முககவசம் அணிபவர்கள் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துவிட்டது. விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு ஒரு சிலர் மட்டும்தான் முககவசம் அணிந்து செல்வதை காண முடிகிறது.

    கொரோனாவுக்கு இன்னும் முடிவு கட்டப்படாத நிலையில் எச்-1 என்-1 இன்புளுயன்சா வைரசும் மிரட்டுகிறது. இந்த நோய் கிருமியில் இருந்து தப்பிக்கும் கேடயமாகவும் முககவசம் இருந்தாலும், இதனை பெரும்பாலான மக்கள் கடைபிடிக்காமல் அலட்சிய போக்குடன் உள்ளனர்.

    தற்போது முககவசம் அணிபவர்கள், அணியாதவர்கள் மனநிலை என்ன என்பதை பார்ப்போம்.

    சென்னை கோயம்பேடு பகுதியில் மளிகை கடை வைத்திருக்கும் ராஜேஷ்:-

    கொரோனாவுக்கு பின்னர் முககவசம் அணிவது கட்டாயம் என்று அறிவித்த நேரத்தில் அதை அணிவது சற்று சிரமமாகதான் இருந்தது. ஆனால் நோய் கிருமிகள் நம் உடலுக்கு செல்வதை தடுக்கும் பாதுகாப்பு அரணாக இருக்கிறது என்பதை உணர்ந்து அணிய தொடங்கினேன். தற்போது முககவசம் அணிவது என் தினசரி வாழ்வில் ஒரு அங்கமாக மாறிவிட்டது. புது புது வைரஸ்கள் பரவி வரும் இந்த காலக்கட்டத்தில் வெளியே செல்லும்போது முககவசம் அணிவதை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.

    முககவசம் அணிவது நம்மை மட்டுமின்றி நம் வீட்டில் உள்ள பெரியவர்களையும் நோய் கிருமிகளில் இருந்து பாதுகாக்கும் என்பதை அனைவரும் உணர வேண்டும்.

    திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த இல்லத்தரசி சுகன்யா:-

    கொரோனா தொற்று வேகமாக பரவிய நேரத்தில் முககவசம் அவசியம் தேவைப்பட்டது. தற்போது இந்த தொற்று பாதிப்பு பெரிதளவில் இல்லை. எனவே முககவசம் தேவைப்படவில்லை. முககவசம் அணிந்தால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது. மூச்சு முட்டுவது போன்ற உணர்வு உண்டாகிறது. எனவே நான் முககவசம் அணிவதை நிறுத்திவிட்டேன். தற்போது நன்றாக சுவாசிக்க முடிகிறது.

    மேலும் விஷேச நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது முகத்தில் 'மேக்-அப்' போட்டு செல்வோம். முககவசம் அணிந்தால் 'மேக்-அப்'பை கலைத்து முகத்தை அலங்கோலமாக்கி விடுகிறது.

    அயனாவரத்தை சேர்ந்த இல்லத்தரசி லில்லி:-

    சாலையில் செல்லும்போது தூசுகள், வாகன புகைகள் உடலுக்கு பகையாகிறது. எனவே முககவசம் நோய் கிருமிகளிடம் இருந்து மட்டும் இல்லை காற்று மாசுவிடம் இருந்து நம்மை பாதுகாக்கிறது.

    எனவே முககவசம் அணிவதன் மூலம் ஆஸ்துமா போன்ற நோய்கள் வராமல் பாதுகாத்துக்கொள்ளலாம். வீட்டில் சமையல் செய்யும்போது நெடி ஏற்படும்போது தும்மல் வருவதை தடுக்கிறது. பூ அணிவது போன்று முககவசம் அணிவதை நான் பழக்கப்படுத்தி கொண்டுள்ளேன். பொது இடங்களுக்கு செல்லும்போது முககவசம் அணிவதில் தனிகவனம் செலுத்துகிறேன்.

    சென்னை வில்லிவாக்கம் பகுதியில் துணியிலான முககவசங்கள் விற்பனை செய்து வரும் முருகேசன்:-

    கொரோனா பரவலுக்கு முன்பு நான் பல்வேறு வியாபாரங்கள் செய்து வந்தேன். கொரோனா பரவலுக்கு பின்னர் முககவச வியாபாரத்தில் ஈடுபட்டேன். இந்த தொற்று வேகமாக பரவிய நேரத்தில் தினமும் 100-க்கும் மேற்பட்ட முககவசங்கள் விற்பனை ஆகும். தற்போது ஒரு நாளைக்கு 5 முககவசங்கள்தான் விற்பனை ஆகிறது. மக்கள் மத்தியில் கொரோனா குறித்த அச்சம் நீங்கி விட்டது என்பதையே இது காட்டுகிறது. ஆரம்பத்தில் லாபகரமாக இருந்த இந்த தொழில் தற்போது நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது. எனினும் தீபாவளி நேரத்தில் மக்கள் வாங்கும் புதிய உடைக்கு ஏற்ப முககவசங்கள் வாங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பில் அதிக முககவசங்களை வாங்கி உள்ளேன். இந்த முககவசங்கள் விற்பனையாகாவிட்டால் இந்த தொழிலை ஓரங்கட்டி விடுவேன்.

    சென்னை கொடுங்கையூர் எம்.ஆர்.நகரில் மருந்தகம் நடத்தி வரும் சங்கர்:-

    கொரோனா வீரியத்தில் இருந்தபோது ஒரு முறை பயன்படுத்தப்படும் முககவசம் அதிகம் விற்பனையானது. அதேபோன்று கைகளை சுத்தம் செய்யக்கூடிய 'சானிடைசர்' போன்ற கிருமி நாசினிகள் விறுவிறுப்பாக விற்பனையாகின.

    இந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டது. தற்போது கொரோனாவா? அப்படின்னா? என்று கேட்கும் மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டார்கள். எனவே முககவசம் அணிவது, கிருமி நாசினிகள் பயன்படுத்தும் பழக்கத்தை பலர் கைவிட்டுவிட்டனர். இதனால் முககவசம், கிருமி நாசினி விற்பனை வெகுவாக சரிந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆரம்பத்தில் உயிர்க்கொல்லி நோயாக கருதப்பட்ட கொரோனா இன்றைக்கு சாதாரண காய்ச்சல் போன்று உடனடியாக குணப்படுத்த கூடிய நோயாக மாறி இருப்பதால், கொரோனா பற்றிய கவலை போய்விட்டது. எனவே முககவசம் அணிவது இல்லை என்பது பெரும்பாலான மக்களின் மனநிலையாக உள்ளது.

    கொரோனா வைரஸ் கிருமி உருமாறும் தன்மை கொண்டது. இந்த தொற்று வீரியம் அடைந்தால் அசுர வேகத்தில் பரவும் ஆபத்து உள்ளதாக ஏற்கனவே மருத்துவ வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே கொரோனா கிருமி இந்த பூமியில் இருந்து ஒழிந்துவிட்டது என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரையில் பொது இடங்களுக்கு செல்லும்போது முககவசம் முக்கியம் என்பது டாக்டர்களின் அறிவுரையாக உள்ளது.

    Next Story
    ×