search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணி:  தலைமை செயலாளர்
    X

    உடைப்பு ஏற்பட்ட கோரம்பள்ளம் குளத்தை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு செய்த காட்சி.

    தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணி: தலைமை செயலாளர்

    • நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடை பெற்று வருகிறது.
    • தூத்துக்குடி நகர பகுதிகளில் தண்ணீர் தேங்கிய பகுதிகளில் அதனை வெளியேற்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18-ந் தேதிகளில் பெய்த கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மாவட்டம் முழுவதும் பெரும் சேதம் அடைந்தது.

    இந்நிலையில் தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை தமிழக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நேற்று பார்வையிட்டார். தூத்துக்குடி மாநகர பகுதியில் வெள்ள சேதங்களை பார்வையிட்ட பின் மாவட்டத்தில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    அந்த வகையில் ஏரல், ஸ்ரீவைகுண்டம், முக்காணி, வாழ வல்லான் மற்றும் தாமிரபரணி கரையோர பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தார்.

    இந்நிலையில் 2-வது நாளாக இன்றும் தூத்துக்குடியில் ஆய்வு செய்தார். கனமழை காரணமாக கோரம்பள்ளம் குளத்தில் உடைப்பு ஏற்பட்டதன் காரணமாக தூத்துக்குடி மாநகர பகுதிகள் பெரும் சேதத்தை சந்தித்தன.

    இதற்கிடையே உடைப்பு ஏற்பட்ட தாமிரபரணி ஆற்றின் கடைசி குளமான கோரம்பள்ளம் குளத்தை இன்று தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு செய்தார்.

    அப்போது குளம் உடைப்பு ஏற்பட்டது குறித்து மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி, போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளிடமும் விவரங்கள் கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கனமழை பெய்த நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடை பெற்று வருகிறது. இதற்காக அனைத்து துறை அதிகாரிகளும் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள்.

    அடிப்படை வசதிகளான மின் கம்பம் சீரமைப்பு, சாலைகள் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. குடிநீர் வசதிகளும் பொதுமக்களுக்கு செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.

    மழை, வெள்ளத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் எந்த அளவு பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து கணக்கெடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி நகர பகுதிகளில் தண்ணீர் தேங்கிய பகுதிகளில் அதனை வெளியேற்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    தூத்துக்குடி மாநகர மற்றும் ஊரக பகுதிகளில் சீரமைப்பு, நிவாரண பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது ரூ.12 கோடியில் கோரம்பள்ளம் குளம் சீரமைக்கப்பட்ட நிலையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, அதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றார்.

    தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி ஏராளமான இருசக்கர, 4 சக்கர வாகனங்கள் பழுதடைந்துள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு அவர் பதிலளிக்கையில், சமீபத்தில் சென்னையில் பெய்த மழை வெள்ளத்தில்போது வாகனங்கள் பழுதடைந்தது. அப்போது இன்சூரன்ஸ் நிறுவனங்களை அழைத்து முகாம்கள் அமைத்து பாதிக்கபட்ட வாகனங்கள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்றது. அதேபோல் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனங்களை அழைத்து முகாம் அமைத்து சீரமைப்பு பணிகள் நடத்தப்படும் என்றார்.

    Next Story
    ×