search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கும்  திரவுபதி முர்முவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
    X

    முக ஸ்டாலின்    திரவுபதி முர்மு

    குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் திரவுபதி முர்முவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

    • குடியரசுத் தலைவர் தேர்தலில், திரவுபதி முர்மு 64 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
    • பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து

    குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட திரவுபதி முர்மு 64 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து எதிர்கட்சிகள் சார்பில் போட்டியிட்ட யஷ்வந்த் சின்ஹாவுக்கு 36 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.

    இந்நிலையில் திரவுபதி முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்து தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இந்தியாவின் மிக உயர்ந்த அரசமைப்புச் சட்டப் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் திரவுபதி முர்முக்குஎனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

    சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவுகளில் இருந்து உயர்ந்த நிலைக்கு வந்துள்ள தாங்கள், நசுக்கப்பட்ட குரல்களின் பக்கம் துணைநின்று துடிப்புமிகுந்த அரசியலமைப்பின்பாற்பட்ட மக்களாட்சியை உறுதிசெய்வீர்கள் என உறுதியாக நம்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த திரவுபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு பாமக சார்பில் எனது உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் .

    திரௌபதி முர்மு சாதாரண குடும்பத்தில் பிறந்து, இந்தியாவின் முதல் குடிமகளாக உயர்ந்திருக்கிறார். மிகவும் எளிமையானவர். அடித்தட்டு மக்களின் தேவைகளையும், பிரச்சனைகளையும் நன்கு அறிந்தவர் என்பது அவரது கூடுதல் சிறப்பாகும்.

    இந்தியாவின் 53 ஆண்டுகால குடியரசு வரலாற்றில் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இது சமூகநீதிக்கும் மகளிர் அதிகாரத்திற்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி ஆகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


    இந்நிலையில் குடியரசு தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் திரவுபதி முர்முவை டெல்லியில் நேரில் சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

    Next Story
    ×