search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
    X

    சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

    • சென்னை விமான நிலையத்தில் ஜனாதிபதியை கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றனர்.
    • ஜனாதிபதி வருகையையொட்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் சுமார் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னை:

    சென்னை பல்கலைக் கழகத்தின் 165-வது பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று முதன்மை விருந்தினராக பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

    பாரம்பரியமிக்க சென்னை பல்கலைக் கழகத்தின் கீழ் 134 இணைப்பு கல்லூரிகள் இயங்கி வருகிறது. இவற்றில் இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை படித்த மாணவர்களுக்கு பட்டச் சான்றிதழ்கள் பல்கலைக் கழகம் சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் கடந்த கல்வியாண்டில் படித்த மாணவ-மாணவிகளுக்கு பட்டச் சான்றிதழ் வழங்குவதற்கான சென்னை பல்கலைக்கழகத்தின் 165-வது பட்டமளிப்பு விழா சில நிர்வாக காரணங்களால் அண்ணா பல்கலைக்கழக விவேகானந்தா அரங்கில் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்றிரவே சென்னை வந்துவிட்டார். கிண்டி கவர்னர் மாளிகையில் தங்கியிருந்த ஜனாதிபதிக்கு இன்று காலையில் முப்படைகளின் மரியாதை அளிக்கப்பட்டது.

    அதை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு காலை 10.15 மணிக்கு பட்டமளிப்பு விழா நடைபெறும் அண்ணா பல்கலைக் கழகத்துக்கு சென்றார். அவரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை பல்கலைக்கழக இணை வேந்தரான உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, துணை வேந்தர் பேராசிரியர் கவுரி ஆகியோர் வரவேற்றனர்.

    அதன் பிறகு அங்கிருந்த அறைக்கு சென்று பட்டமளிப்பு விழா அங்கி அணிந்து விழா அரங்குக்கு ஜனாதிபதி வருகை தந்தார். அவருடன் கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி ஆகியோரும் வருகை புரிந்தனர்.

    அதன் பிறகு சரியாக 10.30 மணிக்கு பட்டமளிப்பு விழா தொடங்கியது. அனைவரையும் பல்கலைக் கழக துணை வேந்தர் கவுரி வரவேற்றார்.

    கவர்னர் ஆர்.என்.ரவி பட்டமளிப்பு விழாவுக்கு தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவுரவ விருந்தினராக பங்கேற்று வாழ்த்துரை வழங்கி பேசினார்.

    அதன் பிறகு மாணவ-மாணவிகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பட்டங்கள் வழங்கி உரையாற்றினார். அதிக மதிப்பெண் பெற்று தங்கப்பதக்கம் வாங்கியவர்களுக்கும் தர வரிசையில் முதலிடம் பெற்ற மாணவ-மாணவிகள் உள்ளிட்ட 100 பேருக்கு பட்டம், பதக்கங்கள் மற்றும் விருதுகளை வழங்கினார். இன்றைய விழாவில் மொத்தம் 762 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது. 565 பேர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். இந்த ஆண்டு மொத்தம் 104416 பேர் பட்டம் பெறுகிறார்கள்.

    விழாவில் சென்னை பல்கலைக் கழக ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள், ஆராய்ச்சி படிப்பு மாணவ-மாணவிகள் பங்கேற்றிருந்தனர். விழா முடிந்ததும் ஜனாதிபதி திரவுபதி முர்மு புறப்பட்டு கிண்டி கவர்னர் மாளிகைக்கு செல்கிறார்.

    இன்று பிற்பகல் 3.30 மணியளவில் கவர்னர் மாளிகையில் பழங்குடியின பிரதிநிதிகளை சந்திக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்று அவர்கள் மத்தியில் கலந்துரையாடுகிறார்.

    அதன் பிறகு இரவு 7 மணிக்கு கவர்னர் மாளிகையில் உள்ள தர்பார் ஹால் பெயர் மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. அந்த விழாவில் ஜனாதிபதி பங்கேற்று மகாகவி சுப்பிரமணிய பாரதியார் என்று அந்த அரங்குக்கு பெயர் சூட்டி கல்வெட்டை திறந்து வைக்கிறார்.

    இதனைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஜனாதிபதிக்கு இரவு விருந்து அளிக்கிறார். இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், தூதரக அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கிறார்கள்.

    ஜனாதிபதி வருகையையொட்டி சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

    Next Story
    ×