search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும்: அண்ணாமலை
    X

    பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும்: அண்ணாமலை

    • ஜி20 மாநாட்டின்போது உலக நாடுகளின் தலைவர்கள் டெல்லியில் இருந்தனர்.
    • மக்கள்தொகையை வைத்து பார்த்தால் 850 எம்.பி.க்கள் வேண்டும். அதனால்தான் பெரிய பாராளுமன்றம் கட்டப்பட்டுள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் பாதயாத்திரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்தியா என்று சொன்னால் ஊழல் என்று சொல்வார்கள். அந்த அளவிற்கு காங்கிரஸ் ஆட்சி இருந்தது. 2014-ம் ஆண்டு மோடி வந்த பிறகே ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வந்துள்ளது. சாதாரண மக்களுக்காக ஊழல் இல்லாமல் ஆட்சி நடந்து வருகிறது. பிரதமர் மோடியின் 9 ஆண்டுகால ஆட்சியில் இந்தியா அசுர வளர்ச்சி பெற்றுள்ளது.

    ஜி20 மாநாட்டின்போது உலக நாடுகளின் தலைவர்கள் டெல்லியில் இருந்தனர். நடராஜர் சிலையை வைத்தே மாநாடு நடத்தப்பட்டது. தமிழனாக பிறக்கவில்லை என்றாலும் பிரதமரின் மூச்சு தமிழ் தமிழ் என்றே சொல்கிறது. இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில் தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல்-பொள்ளாச்சி நான்கு வழி சாலை பலரின் எதிர்பார்ப்பு. 2024 ஜூன் மாதம் அத்திட்டம் நிறைவு பெறுகிறது. காமராஜர் 12 அணைகள் கட்டினார். தற்போது டாஸ்மாக்கை அமைத்து வருகிறார்கள். மக்களை ஏமாற்றும் விதமாக மகளிர் உரிமை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 6 மாதம் மட்டும் செயல்படுத்தும் திட்டமாக இருக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. தற்போது 543 எம்.பி.க்கள் உள்ளனர். மக்கள்தொகையை வைத்து பார்த்தால் 850 எம்.பி.க்கள் வேண்டும். அதனால்தான் பெரிய பாராளுமன்றம் கட்டப்பட்டுள்ளது.

    2024 பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை உயர்த்தப்பட உள்ளது. பாராளுமன்ற தேர்தல் என்றால் மோடி. சட்டமன்ற தேர்தல் என்றால் தி.மு.க. இருக்கக்கூடாது என்ற முடிவை எடுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×