search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    அதிமுகவின் தோல்விக்கு இதுதான் காரணம்... பரபரப்பை எகிறச் செய்த ஓ.பி.எஸ். ஆதரவாளர்களின் விளம்பரம்
    X

    அதிமுகவின் தோல்விக்கு இதுதான் காரணம்... பரபரப்பை எகிறச் செய்த ஓ.பி.எஸ். ஆதரவாளர்களின் விளம்பரம்

    • ஆட்சியில் இருந்தபோதே உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்ற ஓ.பன்னீர்செல்வத்தின் கருத்தை ஏன் ஏற்கவில்லை?
    • 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை அவசர அவசரமாக நிறைவேற்றியதே தென் மாவட்டங்களில அதிமுக தோல்விக்கு காரணம்.

    சென்னை:

    அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், இது தொடர்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். 6வது நாளாக இன்றும் ஆலோசனை நீடிக்கிறது.

    ஒற்றை தலைமை தேவை என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர். அவருக்கு பெரும்பாலான நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் ஒற்றை தலைமை தேவையில்லை என ஓ.பன்னீர்செல்வம் தனது கருத்தை கூறி உள்ளார். எனவே இரு தரப்பினருக்கும் இடையே சுமுகமான உடன்பாடு ஏற்படுவதில் இழுபறி நீடிக்கிறது.

    கட்சியில் ஓ.பன்னீர்செல்வத்தின் செல்வாக்கு குறைந்துள்ள நிலையில், அவரது அதரவாளர்கள் தரப்பில் இன்று பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆலோசனைகளை பின்பற்றாமல் அவரது ஆதரவாளர்களை ஓரங்கட்டியதே அதிமுகவின் தொடர் தோல்விகளுக்கு காரணம் என குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.

    'அதிமுகவின் விசுவாசமிக்க தொண்டர்கள்' என்ற பெயரில் வெளியான அந்த விளம்பரத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-

    அதிமுகவில் தாங்கள் அதிகாரம்மிக்கவர்களாக இருக்க வேண்டும் என்று கருதிய சிலர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களை ஓரங்கட்டியதுடன், ஆட்சியில் இருந்தபோதே உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்ற ஓ.பன்னீர்செல்வத்தின் கருத்தை ஏன் ஏற்கவில்லை?

    கட்சியில் இருந்து விலகிச் சென்ற ஒரு குழுவினரை மீண்டும் சேர்த்து ஒரே இயக்கமாக அதிமுகவை முன்னெடுத்து செல்லாததால் அதிமுகவின் வாக்கு சதவீதம் சரிந்துள்ளது. 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை முறைப்படி கமிட்டி அமைத்து நிறைவேற்றாமல், அவசர அவசரமாக நிறைவேற்றியதே தென் மாவட்டங்களில அதிமுக தோல்விக்கு காரணம்.

    அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வத்தை ஏன் சுதந்திரமாக செயல்படுவதற்கு விடவிலலை?

    நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆலோசனைகளை பின்பற்றாததுடன், அவர் கூறும் திறமையானவர்களுக்கு ஏன் வாய்ப்பு வழங்கவில்லை?

    இவ்வாறு அந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×