search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பொதுக்குழு கூட்டம்: எடப்பாடிக்கு எழுதிய கடிதத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்  ஓபிஎஸ்
    X

    பொதுக்குழு கூட்டம்: எடப்பாடிக்கு எழுதிய கடிதத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார் ஓபிஎஸ்

    • ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நிராகரிப்பு மனுவை தாக்கல் செய்திருந்தனர்.
    • வழக்கு தொடர்ந்த சூரியமூர்த்தி கட்சியின் உறுப்பினரே இல்லை என அதிமுக வழக்கறிஞர் தெரிவித்தார்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், வருகிற 23-ம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி திண்டுகல்லை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த மனுவை நிராகரிக்கும்படி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நிராகரிப்பு மனுவை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு விசாரணை 22ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. ஆனால், அதிமுக பொதுக்குழு கூட்டம் 23ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருப்பதால், இந்த வழக்கை முன்கூட்டியே விசாரிக்கவேண்டும் என சூரியமூர்த்தி புதிய மனுவை தாக்கல் செய்தார். அந்த மனு இன்று நீதிபதி பிரியா முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது அதிமுக சார்பில் பதில் மனு தாக்கல் செய்வதற்கு அவகாசம் வேண்டும் என தற்காலிக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் சபாநாயகர் தனபால் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்பின்னர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் வாதாடும்போது, பொதுக்கூட்டத்தை தள்ளி வைக்கக் கோரி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியிருந்ததால், அந்த கூட்டத்தை எதிர்த்த மனு காலாவதியாகிவிட்டதாக கருதவேண்டும் என்றார்.

    ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் பொதுக்குழுவை கூட்ட முடியும் என்றும், தள்ளி வைக்க ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓபிஎஸ் கடிதம் எழுதியதாக அவரது வழக்கறிஞர் குறிப்பிட்டார். ஓபிஎஸ் எழுதிய கடிதம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

    தொடர்ந்து அதிமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் சூரியமுர்த்தி கட்சியின உறுப்பினரே இல்லை என்று தெரிவித்தார்.

    இதற்கு சூரியமூர்த்தி தரப்பு வழக்கறிஞர் கடும் ஆட்சேபம் தெரிவித்தார். சூரியமூர்த்தி கட்சியின் உறுப்பினர் என்பதற்கு ஆதாரம் இருப்பதாகவும், உறுப்பினர் இல்லை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் வழக்கறிஞர் கூறினார்.

    இதையடுத்து பொதுக்குழு கூட்டத்தை தள்ளிவைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை முன்கூட்டியே விசாரிக்கக் கோரிய மனு மீதான விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தார் நீதிபதி. இந்த மனுவுக்கு நாளை பதில் அளிக்கும்படி எதிர்மனுதாரர்களுக்கு உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தார்.

    Next Story
    ×