search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நடிகை சித்ரா மரண வழக்கு விசாரணையை 6 மாதங்களில் முடிக்க வேண்டும்- சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
    X

    நடிகை சித்ரா மரண வழக்கு விசாரணையை 6 மாதங்களில் முடிக்க வேண்டும்- சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

    • விசாரணையை விரைந்து முடிக்க கோரியும் சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
    • வழக்கின் விசாரணை திருவள்ளூர் மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டையில் உள்ள ஓட்டல் ஒன்றின் அறையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சித்ராவின் கணவர் ஹேம்நாத் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கின் விசாரணை திருவள்ளூர் மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணையை சென்னை கோர்ட்டுக்கு மாற்றக் கோரியும், விசாரணையை விரைந்து முடிக்க கோரியும் சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    அதில், தன் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கோரி ஹேம்நாத் தொடர்ந்த மனுவை கடந்த ஆண்டு தள்ளுபடி செய்த ஐகோர்ட்டு, விசாரணையை விரைந்து முடிக்க உத்தர விட்டும் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. விசாரணையை இழுத்தடிக்கும் நோக்கில் வேண்டு மென்றே ஹேம்நாத் பல்வேறு மனுக்களை தாக்கல் செய்து வருகிறார்.

    2021ம் ஆண்டிலிருந்தே வழக்கின் விசாரணை குற்றச்சாட்டுப் பதிவு செய்யும் கட்டத்திலேயே உள்ளது. வயது முதுமை காரணமாக தன்னால் வழக்கின் விசாரணைக்காக திருவள்ளூர் சென்று வருவதற்கு சிரமமாக உள்ளது என்று கூறியிருந்தார். இந்த மனு இன்று நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் இருந்து தம்மை விடுவிக்க கோரி ஹேம்நாத் மனுத் தாக்கல் செய்துள்ளதாகவும், வழக்கில் 67 சாட்சிகளிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து, வழக்கின் விசாரணையை சென்னை கோர்ட்டுக்கு மாற்ற மறுத்த நீதிபதி வழக்கின் விசாரணையை 6 மாதங்களில் முடிக்க திருவள்ளூர் மகளிர் கோர்ட்டுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

    Next Story
    ×