search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நவீன மருத்துவ உபகரணம் கொண்ட 75 ஆம்புலன்ஸ் மற்றும் 'மனம்' திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    • அரசு மனநலக் காப்பகத்தில் 2.36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 14 அறைகளுடன் அமைக்கப்பட்டுள்ள இடைநிலை பராமரிப்பு மையத்தையும் முதல்வர் திறந்து வைத்தார்.
    • ஆசிரியர் கையேடு மற்றும் தேசிய வளர் இளம் பருவத்தினர் நல திட்டம்- சம சயது பயிற்றுநர் பயிற்சிக் கையேட்டினையும் வெளியிட்டார்.

    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ரூ.22.84 கோடி மதிப்பீட்டில் 75 அதிநவீன மருத்துவ உபகரணங்கள் கொண்ட மேம்படுத்தப்பட்ட புதிய அவசரகால ஊர்திகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சென்னை, கீழ்பாக்கத்தில் உள்ள அரசு மனநல காப்பகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொடியசைத்து தொடங்கி வைத்து, அவசரகால ஊர்திகளை பார்வையிட்டு, வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

    தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள், துணை மருத்துவக் கல்லூரிகளிலும் 'மனம்' என்ற பெயரில் மருத்துவ மாணவர்களின் மனநலன் காக்கும் சிறப்புத் திட்டம் தொடங்கப்பட்டு 'மன நல நல்லாதரவு மன்றங்கள்' அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த மனநல நல்லாதரவு மன்றங்களில் மருத்துவக் கல்லூரி முதல்வர், மனநலத் துறை தலைவர் உள்ளிட்ட அனைத்து துறைத் தலைவர்கள், உதவி பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு மாணவர்களின் மனநலனை மேம்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    உளவியல் ஆலோசனை தேவைப்படும் மாணவர்கள் தயக்கமின்றி, உடனடியாக மன நல மருத்துவரை தொடர்பு கொள்ளும் வகை யில் அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் 'மனம்' அலைபேசி உதவி எண் 14416 பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

    இன்று, 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் பள்ளி மாணவர்களின் மனநலத்தை வலுப்படுத்தும் 'மனநல நல்லாதாரவு மன்றங்கள் (மனம்)" மற்றும் "நட்புடன் உங்களோடு மனநல சேவை (14416)" ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.

    இத்திட்டம் முதல் கட்டமாக அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளில் தொடங்கப்பட்டு பின்னர் அனைத்து கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் விரி வுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை அரசு மனநலக் காப்பகத்தில் 2.36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 14 அறைகளுடன் அமைக்கப்பட்டுள்ள இடைநிலை பராமரிப்பு மையத்தையும் அவர் திறந்து வைத்தார்.

    அனைத்து வகையான மனநல சேவைகளையும் ஓரிடத்தில் வழங்கும் வகையில், ஏற்கனவே சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் அரசு மனநலக் காப்பகம் தரம் உயர்த்தப்பட்டு, தமிழ்நாடு மனநலம் மற்றும் மூளை நரம்பியல் நிறுவனமாக தொடங்கப்பட உள்ளது. இங்கு மனநல சேவையுடன் கூடுதலாக நரம்பியல் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை சேவைகளும் வழங்கப்பட உள்ளது.

    மாநிலத்தின் எந்தப் பகுதியிலிருந்தும் மனநல ஆலோசனை பெற, தொலை மருத்துவத்திற்கான மின்னணு மையம் உருவாக்கப்படும். இந்த ஒப்புயர்வு மையத்தில் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள், மனநல உளவியல் மாணவர்கள் மற்றும் செவிலிய மாணவர்கள் மனநலப் பயிற்சி பெறும் வசதிகள் ஏற்படுத்தப்படும். மனநலம் மற்றும் நரம்பியல் ஒப்புயர்வு மையத்திற்கு 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கட்டிடத்தின் முப்பரிமாண வரைபடத்தை முதலமைச்சர் வெளியிட்டார். ஆசிரியர் கையேடு மற்றும் தேசிய வளர் இளம் பருவத்தினர் நல திட்டம் சம சயது பயிற்றுநர் பயிற்சிக் கையேட்டினையும் வெளியிட்டார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ரகுபதி, மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, எம்.எல்.ஏ.க்கள் வெற்றியழகன், தாயகம் கவி, மேயர் பிரியா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×