search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஒரே மாதத்தில் கல்வித்துறை நடவடிக்கை: அரசு பள்ளிகளில் 3 லட்சம் மாணவ-மாணவிகள் சேர்ந்தனர்
    X

    ஒரே மாதத்தில் கல்வித்துறை நடவடிக்கை: அரசு பள்ளிகளில் 3 லட்சம் மாணவ-மாணவிகள் சேர்ந்தனர்

    • அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 21,233 பேர் சேர்ந்து முதலிடத்தில் உள்ளது.
    • 23-ந் தேதி ஆண்டு இறுதி தேர்வு நிறைவு பெறுவதால் அதற்கு முன்னதாக மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்தி முடிக்க கல்வித்துறை முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது.

    சென்னை:

    2024-2025-ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை மார்ச் 1-ந்தேதி பள்ளி கல்வித்துறை தொடங்கியது. அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 5.5 லட்சம் மாணவ-மாணவிகளை சேர்க்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    அங்கன்வாடி மையங்களில் 5 வயது உள்ள குழந்தைகளை கண்டறிந்து அவர்களை பள்ளிகளில் சேர்க்க கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    வருகிற 12-ந் தேதிக்கு முன் 4 லட்சம் மாணவர்களை சேர்க்க இலக்கு நிர்ணயித்து பணிபுரிய வேண்டும் என தொடக்கக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டு உள்ளார்.

    மாணவர்கள் சேர்க்கை விவரங்களை உடனுக்குடன் கல்வி மேலாண்மை தகவல் முறைமை (எமிஸ்) இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தமிழகம் முழுவதும் நேற்று வரை நடந்த மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது. அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 21,233 பேர் சேர்ந்து முதலிடத்தில் உள்ளது. கள்ளக்குறிச்சி 16,938 பேரும், கிருஷ்ணகிரியில் 13,205 பேரும் அரசு பள்ளிகளில் சேர்ந்து உள்ளனர். 23-ந் தேதி ஆண்டு இறுதி தேர்வு நிறைவு பெறுவதால் அதற்கு முன்னதாக மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்தி முடிக்க கல்வித்துறை முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது.

    இதற்கிடையில் தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கையை தொடங்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் இயக்குனர் எம்.பழனிசாமி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

    இதற்கு வருகிற 23-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் மே 22-ந் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    www.rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் ஏப்ரல் 22-ந்தேதி முதல் மே 22-ந்தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

    Next Story
    ×