search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    23 வயதில் நீதிபதி பணிக்கு தேர்வான பழங்குடியின பெண்: முதலமைச்சர் வாழ்த்து
    X

    23 வயதில் நீதிபதி பணிக்கு தேர்வான பழங்குடியின பெண்: முதலமைச்சர் வாழ்த்து

    • ஸ்ரீபதியின் தாயார் மல்லிகா, தந்தை காளி ஆகியோர் ஓட்டலில் பணியாற்றி தங்கள் குழந்தைகளை படிக்க வைத்தனர்.
    • வறுமையை உணர்ந்து முன்னேறி படித்த ஸ்ரீபதி தற்போது நீதிபதிகளுக்கான தேர்வில் வெற்றி பெற்று பழங்குடியினத்திற்கே பெருமை சேர்த்துள்ளார்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் கீழமை நீதிமன்றங்களில் காலியாக உள்ள 245 சிவில் நீதிபதி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு ஜூன் 1-ந்தேதி, டி.என்.பி.எஸ்.சி. எனும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.

    இந்த பணியிடங்களுக்கு 6,031 ஆண்களும், 6,005 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 12,037 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

    முதல்நிலை தேர்வு, மெயின் தேர்வு ஆகியவற்றில் வெற்றி பெற்ற 472 பேர் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு நேர்முக தேர்வு முடிவடைந்த நிலையில் தேர்வு முடிவும் வெளியானது. இதில், திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீபதி (வயது 23) என்ற பழங்குடியின பெண்ணும் சிவில் நீதிபதியாக தேர்வாகி உள்ளார்.

    இவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் சமூகவலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-

    பெரிய வசதிகள் இல்லாத மலைக்கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் ஒருவர் இளம் வயதில் இந்நிலையை எட்டியிருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.

    அதுவும் நமது திராவிட மாடல் அரசு தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசு பணிகளில் முன்னுரிமை என கொண்டு வந்த அரசாணையின் வழியே ஸ்ரீபதி நீதிபதியாக தேர்வாகியுள்ளார் என்பதை அறிந்து பெருமை கொள்கிறேன்.

    அவரது வெற்றிக்கு உறுதுணையாக நின்ற அவரது தாய்க்கும் கணவருக்கும் எனது பாராட்டுகள். சமூகநீதி என்ற சொல்லை உச்சரிக்கக் கூட மனமில்லாமல் தமிழ்நாட்டில் வளைய வரும் சிலருக்கு ஸ்ரீபதி போன்றோரின் வெற்றிதான் தமிழ்நாடு தரும் பதில்.

    'நெடுந்தமிழ் நாடெனும் செல்வி, - நல்ல நிலை காண வைத்திடும்; பெண்களின் கல்வி! பெற்றநல் தந்தை தாய் மாரே, - நும் பெண்களைக் கற்க வைப் பீரே! இற்றைநாள் பெண் கல்வி யாலே, - முன்னேற வேண்டும் வையம் மேலே!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ஸ்ரீபதிக்கு திருமணமாகி குழந்தை இருப்பதும், குழந்தை பிறந்த 2-வது நாளில் திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு வந்து எழுத்து தேர்வில் கலந்துகொண்டு அவர் வெற்றி பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    நீதிபதியாக தேர்வாகி உள்ள ஸ்ரீபதிக்கு ஜெயசூர்யா என்ற தம்பியும், சரண்யா என்ற ஒரு தங்கையும் உள்ளனர். இவர்களது தந்தைக்கு ஜவ்வாதுமலை அடிவாரத்தில் தற்போது குப்பநத்தம் அணை உள்ள இடத்தில் விவசாய நிலம் இருந்துள்ளது.

    குப்பநத்தம் அணை கட்டுவதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டபோது இவர்களது குடும்பத்தினரின் நிலத்தையும் அரசு கையகப்படுத்தியது. இதனால் ஸ்ரீபதி குழந்தையாக இருக்கும்போதே, தாயார் மல்லிகா தனது சொந்த ஊரான திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் குடும்பத்தினருடன் குடியேறினார்.

    அங்கு ஸ்ரீபதியின் தாயார் மல்லிகா, தந்தை காளி ஆகியோர் ஓட்டலில் பணியாற்றி தங்கள் குழந்தைகளை படிக்க வைத்தனர்.

    ஏலகிரி மலையில் உள்ள சார்லஸ் மேல்நிலைப்பள்ளியில் ஆரம்பக் கல்வியை ஸ்ரீபதி பள்ளிப்படிப்பு முடிந்ததும் சட்ட படிப்பை தேர்வு செய்து டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சேர்ந்து 5 வருடம் சட்டம் பயின்று வக்கீலானார்.

    வறுமையை உணர்ந்து முன்னேறி படித்த ஸ்ரீபதி தற்போது நீதிபதிகளுக்கான தேர்வில் வெற்றி பெற்று பழங்குடியினத்திற்கே பெருமை சேர்த்துள்ளார். இதனால் அவரை கஷ்டப்பட்டு படிக்க வைத்த பெற்றோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    Next Story
    ×