என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    முள்வேலி அமைத்து அடைக்கப்பட்டுள்ளதால் வெளியே வர முடியாமல் வீட்டிற்குள் முடங்கியுள்ளவர்களை காணலாம்
    X
    முள்வேலி அமைத்து அடைக்கப்பட்டுள்ளதால் வெளியே வர முடியாமல் வீட்டிற்குள் முடங்கியுள்ளவர்களை காணலாம்

    வீட்டை விட்டு வெளியே செல்ல பாதை இல்லாததால் 4 பேர் உணவின்றி வீட்டில் ஒரு வாரமாக முடக்கம்

    அறந்தாங்கி அருகே வீட்டை விட்டு வெளியே செல்ல பாதை இல்லாததால் பள்ளி சிறுமி மூதாட்டி உட்பட 4 பேர் உணவு, தண்ணீர் இன்றி வீட்டில் ஒரு வாரமாக முடங்கி உள்ளனர்.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே குண்டகவயல் கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர் வீட்டிற்கு செல்லும் பொதுப்பாதையில் அதே பகுதியை சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் ராதிகா சண்முகம் என்பவர் வீடு கட்டியுள்ளார்.

    இதனால் ராமகிருஷ்ணன் குடும்பத்தினர் வெளியில் செல்ல வழி இல்லாமல் அடைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் மனு அளித்ததில் கோட்டாட்சியர் சொர்ணராஜ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

    ஆய்வைத் தொடர்ந்து ஊராட்சிமன்றத் தலைவர் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டியுள்ள இடத்தின் வழியாக பாதை அமைத்து தராமல், வேறு ஒருவரின் நத்தம் புறம்போக்கு இடத்தில் தற்காலிக பாதை அமைத்து கொடுத்துள்ளார்.

    இந்நிலையில் நத்தம் புறம்போக்கு இடத்தில் வசித்து வருபவர், இது எனக்கு சொந்தமான இடம் என நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்று, அவருக்கு சொந்தமான இடத்தை முள் வேலி போட்டு அடைத்துள்ளார். இதனால் பாதையின்றி ராமகிருஷ்ணன் குடும்பத்தை சேர்ந்த பள்ளி சிறுமி உட்பட நான்கு பெண்கள் வெளியில் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

    கடந்த 30ந்தேதி அடைக்கப்பட்ட வேலியால், ஒரு வார காலமாக வெளியில் செல்ல முடியாமல் உணவு, குடிக்க தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர். மேலும் சிறுமி பள்ளிக்கு செல்ல முடியாமல் வீட்டிலே அடைக்கப்பட்டுள்ளார்.

    இது தொடர்பாக வீட்டிலிருப்பவர்கள் கூறுகையில், எங்கள் வீட்டிலிருந்து கடை வீதிக்கு செல்ல பொதுப்பாதை ஒன்றை பயன்படுத்தி வந்தோம். இதில் பாதையின் குறுக்கே ஊராட்சி மன்றத் தலைவர் வீடுகட்டியுள்ளார். இதனால் எங்கள் வீட்டைச் சுற்றி வேலி போட்டு அடைக்கப்பட்டுள்ளது.

    நாங்கள் ஒரு வார காலமாக வீட்டிற்குள்ளேயே அடைக்கப்பட்டுள்ளோம். எனது குழந்தைக்கு 2 நாட்களாக மூக்கில் ரத்தம் வடிவதோடு உடல் நிலையும் சரியில்லாமல் உள்ளது. மருத்துவமனைக்கு அழைத்து செல்லக்கூட வழியில்லாமல் தவித்து வருகிறோம். இன்னும் 2 நாட்கள் ஆனால் உணவு தண்ணீர் இன்றி இறந்து விடுவோம் என தெரிவித்தனர்.

    எனவே அரசு உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொண்டுள்ளனர். அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வோம் என்று வேதனை தெரிவித்தனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    Next Story
    ×