search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மதுபோதையில் சாலையை கடக்க முடியாமல் தள்ளாடிய பள்ளி மாணவி-
    X
    மதுபோதையில் சாலையை கடக்க முடியாமல் தள்ளாடிய பள்ளி மாணவி-

    மதுபோதையில் சாலையை கடக்க முடியாமல் தள்ளாடிய பள்ளி மாணவி- சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ

    தருமபுரி அருகே மதுபோதையில் அரசு பள்ளி மாணவி சாலையை கடக்க முடியாமல் தள்ளாடிய சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலாக பரவி வருகிறது.
    எங்கே செல்கிறது... மாணவ சமுதாயத்தின் எதிர்கால பாதை..?

    தற்போது கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும், ஏன் மாணவர்களின் பெற்றோர்களின் கேள்வியாக எதிரொலித்து வருகிறது.

    ஆம். தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக அரசு பள்ளி மாணவர்களும், மாணவிகளும் எல்லை மீறி செய்யும் சேட்டைகள் , கவலையளிக்கும் வகையில் இருந்து வருகிறது.

    வகுப்பறையில் ஆசிரியரை தாக்குவது, பாடம் நடந்து கொண்டிருக்கும் போது டான்ஸ் ஆடுவது, மேலும் மாணவியின் மடியில் தலை வைத்து விளையாடும் மாணவர்கள், மேஜை நாற்காலியை போட்டு உடைப்பது என.. இப்படியாக சென்று கொண்டிருக்கிறது. இதனால் மாணவர்களின் கல்வி, எதிர்கால வாழ்வு சீரழியும் அபாயத்தில் உள்ளது.

    கொரோனா தொற்று காரணமாக அரசு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடந்து வந்தன. இதனால் மாணவ மாணவிகளின் கைகளில் ‘செல்போன்கள்‘ கிடைத்ததால் அதுவே அவர்களது எதிர்கால வாழ்வுக்கு ‘வேட்டு’ வைக்கும் விதமாக மாறி விட்டது.

    மேலும் செல்போனில் 24 மணிநேரமும் ஆன்லைன் விளையாட்டில் மாணவர்கள் மூழ்கி கிடக்கின்றனர். இது பெற்றோர்களுக்கு மிகவும் கவலையளிக்கும் விஷயமாக மாறி உள்ளது.

    மாணவர்கள் மதுகுடிப்பதும், வகுப்பறையில் ரகளையில் ஈடுபடுவதும் தொடர்கதையாக நடந்து வருகிறது.

    சமீபத்தில் டி.ஜி.பி. சைலேந்திர பாபு, அரசு பள்ளி மாணவர்களுகக்கு அறிவுரை கூறி வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் மாணவர்களுக்கு பெரிய சொத்து, அவர்களது வகுப்பறையும், ஆசிரியர்களும் தான். எனவே நல்ல சிந்தனையுடன் படிப்பில் கவனம் செலுத்துமாறு அறிவுரை கூறினார்.

    இந்த நிலையில் மதுபோதையில் அரசு பள்ளி மாணவி சாலையை கடக்க முடியாமல் தள்ளாடிய சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலாக பரவி வருகிறது. இதனால் கல்வியாளர்கள், பெற்றோர்கள் மீண்டும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    தருமபுரி அருகே நடந்த இந்த சம்பவம் பற்றி விவரம் வருமாறு:

    தருமபுரி மாவட்டம் இண்டூர் பஸ் நிலையத்தில் அரசு பள்ளி மாணவி ஒருவர் மது அருந்திவிட்டு தள்ளாடிய படி வந்துள்ளார்.

    இதனை கண்ட பொதுமக்களில் ஒரு சிலர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இது குறித்த வீடியோவை வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் பகிர்ந்ததால் தற்போது அதிக அளவில் பரவி வருகின்றன.

    இந்நிலையில் சாலையின் மறுபுறத்தில் இருந்தாக கூறப்படும் 4 மாணவிகளில் ஒரு மாணவி மட்டும் சாலையைக் கடக்க முயற்சித்தபோது சாலையின் நடுவில் இருந்த சென்டர் மீடியனில் நிற்க முடியாமல் தள்ளாடிய நிலையில் கைத்தாங்கலாக சாய்ந்து நின்றுள்ளார்.

    மேலும் சாலையைக் கடக்கும் பொழுது கடக்க முடியாமல் தள்ளாடிய காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. மற்ற 3 மாணவிகள் சாலையின் மறு புறத்திலேயே நின்று விட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    மாணவியின் மதுபோதை வீடியோவை சமூக வலைத்தளங்களில் பார்த்து சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    இதற்கிடையே இண்டூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அரசு டாஸ்மாக் கடை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் வேறு பகுதிக்கு சென்று மதுபாட்டில்களை மாணவிகள் சென்று வாங்கினார்களா? அல்லது மாணவிகளுக்கு எப்படி மது கிடைத்தது என்ற மர்மம் புரியாத புதிராக இருந்து வருகிறது.

    யாரேனும் மாணவிகளை அழைத்து சென்று மதுவை வாங்கி கொடுத்தார்களா என்ற சந்தேகமும் எழுகிறது. எது எப்படி இருந்தாலும் தற்போது பள்ளி மாணவிகளும் வகுப்பை புறக்கணித்து விட்டு மது அருந்தி தள்ளாடும் நிலைக்கு இருந்து வருவது சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    தருமபுரி மாவட்டத்தில் ஏற்கனவே பெண் சிசுக் கொலைகள், பள்ளி சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இளம் வயது திருமணங்கள் உள்ளிட்ட குற்றங்களை தடுப்பதற்காக தமிழக அரசும் காவல் துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    இருப்பினும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.
    Next Story
    ×