என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    காயமடைந்த ரசூல்
    X
    காயமடைந்த ரசூல்

    முன்னாள் காதலியுடன் பேசிய வாலிபருக்கு சரமாரி கத்திக்குத்து - ஒருவர் கைது

    விராலிமலையில் கருத்து வேறுபாட்டால் பிரிந்த முன்னாள் காதலியுடன் பேசிய வாலிபரை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்தவர் பாலு. இவர் அதே பகுதியில் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். திடீரென்று காதலர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவர்கள் பிரிந்து விட்டனர்.

    இந்த நிலையில் பாலு காதலித்து வந்த பெண்ணுடன் விராலிமலையை சேர்ந்த முகமது யாகூப் மகன் ரசூல் என்ற வாலிபர் பேசி பழகி வந்துள்ளார். இதைப் பிடிக்காத பாலு அவரை கண்டித்தார். இருப்பினும் அதனை கண்டுகொள்ளாத ரசூல் தொடர்ந்து பேசி வந்துள்ளதாக தெரிகிறது.

    நேற்று சிவராத்திரி விழா விராலிமலை அருகே உள்ள விராலூர் பூமீஸ்வரர் கோவிலில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது. அங்கு வழிபாடு நடத்த சென்ற பாலுவின் முன்னாள் காதலியான அந்த பெண்ணுடன் ரசூல் நின்று பேசிக் கொண்டிருந்ததை பார்த்துள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த பாலு மற்றும் அவரது நண்பர்கள் ரசூலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பாலு தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரசூலை குத்தினார். இதில் கழுத்து, நெஞ்சு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

    சம்பவ இடத்தில் மயங்கிய ரசூலை அருகில் இருந்தவர்கள் மீட்டு மணப்பாறை தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். கத்திக்குத்தில் நிறைய ரத்தம் வெளியேறியதால் ஆபத்தான நிலையில் ரசூல் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவலறிந்த விராலிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். இதில் காதல் விவகாரத்தால் குத்திக்குத்து நடந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து கார்த்திக்கை பிடித்த போலீசார் தப்பியோடிய ராசு மகன் பாலு (23) அவரது தம்பி அருண், நண்பர் சக்தி ஆகியோரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் விராலிமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
    Next Story
    ×