search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கனிமொழி
    X
    கனிமொழி

    தென் மாவட்டங்களில் விரைவில் ஏராளமான தொழிற்சாலைகள் தொடங்கப்படும்- கனிமொழி எம்.பி. பிரசாரம்

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்பட தென்மாவட்டங்களில் தொழில்வளத்தை பெருக்க பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதாக கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.
    தென்காசி:

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. பிரசாரம் செய்து வருகிறார்.

    இன்று அவர் தென்காசி மாவட்டம் கீழசுரண்டையில் பிரசாரத்தை தொடங்கினார். அப்போது கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    கொரோனா காலக்கட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்கவேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். ஆனால் அ.தி.மு.க. அரசு ரூ.1,000 மட்டுமே வழங்கியது. இதனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ரூ.4 ஆயிரம் நிவாரணத்தை தமிழக முதல்வர் வழங்கினார்.

    இதே போல பெண்களுக்கு டவுன் பஸ்களில் இலவச பயணம் அறிவித்தார். இதனால் நீங்கள் பயன் அடைந்து வருகிறீர்கள். பெண்களுக்கான திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

    விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று சுரண்டை பகுதியில் பாசன குளங்களை மேம்படுத்தி குடிநீர் ஆதாரங்களை பெருக்க உரிய நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்பட தென்மாவட்டங்களில் தொழில்வளத்தை பெருக்க பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளது. விரைவில் ஏராளமான தொழிற்சாலைகள் தொடங்கப்படும். இதுகுறித்து முதல்வர் விரைவில் அறிவிப்பார்.

    அரசின் நலத்திட்டங்கள் மக்களுக்கு சென்றடைய நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணியை மக்கள் ஆதரிக்க வேண்டும். உங்கள் பகுதியில் உள்ள பிரச்சினைகளை தகுதியான நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களிடம் கூறினால் அவர்கள் மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் மூலம் முதல்வருக்கு தெரிவித்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பார்கள்.

    எனவே தேர்தலில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை மக்கள் வெற்றி பெற செய்யவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×