search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பணம்
    X
    பணம்

    அசைவ சாப்பாட்டுக்கு ஆசைப்பட்டு ரூ.3 லட்சம் பணத்தை தொலைத்த நபர்

    விருதுநகருக்கு செல்லும்போதுதான் அழகிரிசாமிக்கு பணப்பை தொலைந்து போனது நினைவுக்கு வந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் மீண்டும் கல்யாண மண்டபத்திற்கு சென்று பார்த்தபோது ரூ.3 லட்சம் வைத்திருந்த பணப்பை மாயமாகி இருந்தது.
    மதுரை:

    விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அழகிரி சாமி (வயது 62). தமிழக அரசு போக்குவரத்து நிறுவனத்தில் பஸ் கண்டக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

    சம்பவத்தன்று அழகிரி சாமி ரூ. 2 லட்சத்து 93 ஆயிரத்து 707 பணத்துடன் மதுரை பாண்டி கோவிலுக்கு புறப்பட்டு வந்தார். அப்போது அங்குள்ள ஒரு மண்டபத்தில் காதுகுத்து நிகழ்ச்சியில் இலவச அன்னதானம் வழங்கப்பட்டது.

    அழகிரிசாமி அசைவ சாப்பாட்டுக்கு ஆசைப்பட்டு மண்டபத்திற்கு சென்றார். சாப்பிட்டு முடித்தவர் ஞாபக மறதியில் பணப் பையை மண்டபத்தில் வைத்துவிட்டு புறப்பட்டுச் சென்று விட்டார்.

    விருதுநகருக்கு செல்லும்போதுதான் அழகிரிசாமிக்கு பணப்பை தொலைந்து போனது நினைவுக்கு வந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் மீண்டும் மதுரை பாண்டி கோவிலுக்கு வந்தார். அங்கு கல்யாண மண்டபத்திற்கு சென்று பார்த்தார். அங்கு யாரும் இல்லை. ரூ. 3 லட்சம் வைத்திருந்த பணப்பை மாயமாகி இருந்தது.

    இது குறித்து அழகிரிசாமி மாட்டுத்தாவணி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். சப்-இன்ஸ்பெக்டர் ராஜு, போலீஸ்காரர் சத்யராஜ் அடங்கிய தனிப்படை விசாரணை நடத்தியது.

    அழகிரிசாமி பணப்பையை தொலைத்த திருமண மண்டபத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அந்த மண்டபத்தில் காதுகுத்து விழா நடத்தியது, திண்டுக்கல் மாவட்டம் மட்டப்பாறை அடுத்த சோழவந்தானை சேர்ந்த கோவை போலீஸ் ஏட்டு பாண்டியராஜன் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து தனிப்படை போலீசார் திண்டுக்கல்லுக்கு புறப்பட்டுச் சென்றனர். அங்கு பாண்டியராஜனிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், போலீசாரிடம் “மண்டபத்தில் உள்ள எல்லா பொருட்களையும் எடுத்துக் கொண்டு திண்டுக்கல்லுக்கு வந்து விட்டோம். அப்போது தான் அதில் ஒரு மஞ்சள் பை இருப்பது தெரிய வந்தது. அதை பிரித்து பார்த்தோம். அதில் சுமார் ரூ. 3 லட்சம் இருந்தது தெரிய வந்தது.

    அழகிரிசாமியிடம் பணத்தை திரும்ப ஒப்படைத்த போலீசார்

    எனவே இதனை சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கலாம் என்று இருந்தோம். இந்த நிலையில் நீங்கள் என்னை தேடி வந்தது மகிழ்ச்சி தருகிறது என்று கூறி தனிப்படை போலீசாரிடம், 2 லட்சத்து 93 ஆயிரத்து 707 ரூபாயை பாண்டியராஜன் திருப்பி ஒப்படைத்தார்.

    இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் மதுரை மாட்டுத்தாவணி போலீஸ் நிலையத்தில் பஸ் கண்டக்டர் அழகிரிசாமியிடம் சுமார் ரூ. 3 லட்ச பணத்தை திரும்ப ஒப்படைத்தனர்.

    மதுரையில் விருதுநகர் கண்டக்டர் தொலைத்த பணப்பையை திண்டுக்கல் போலீஸ்காரரிடம் தனிப்படை போலீசார் மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


    Next Story
    ×