என் மலர்
செய்திகள்

முககவசம் அணியாதவர்களை பிடித்து அபராதம் விதித்த கலெக்டர்
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று குறைந்து காணப்பட்டது. தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக முககவசம் அணியாமல் தொற்றை பரப்புபவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என கலெக்டர் எச்சரித்தார்.
மேலும் மாவட்டம் முழுவதும் முககவசம் அணியாமல் வாகனங்களில் சுற்றி திரிபவர்களை பிடித்து அதிகாரிகள் அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று ஊட்டியில் நடந்து செல்லும் மக்கள், வாகனங்களில் செல்வோர்கள் என அனைவரும் அரசின் விதி முறைகளை கடை பிடிக்கிறார்களா? முககவசம் அணிந்து வருகிறார்களா? என்பதை ஆய்வு செய்ய மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவே களத்தில் இறங்கினார்.
ஊட்டி ஸ்டீபன் சர்ச் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் அந்த வழியாக முககவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் வந்தவர்கள், சுற்றுலா வாகனங்களில் வந்தவர்களை தடுத்து நிறுத்தி ரூ.200 அபராதம் விதித்தார்.
இதேபோல் அந்த வழியாக வந்த அரசு பஸ்சில் ஏறி பயணிகள் முககவசம் அணிந்துள்ளனரா? என ஆய்வு மேற்கொண்ட அவர், அப்படி அணியாதவர்களுக்கு அபராதம் விதித்ததுடன் கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தினார். தொடர்ந்து அந்த வழியாக முககவசம் அணியாமல் நடந்து சென்ற 50 பாதசாரிகளை தடுத்து நிறுத்தி ரூ.200 அபராதம் விதித்தார்.
இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:-
பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே வரும்போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். தற்போது மக்களிடம் முக கவசம் அணிவது குறைய தொடங்கி உள்ளது. முக கவசம் அணிவதை கண் காணிக்க கூடுதல் தனிக்குழு அமைக்கப்பட உள்ளது. சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் முறையான பாதுகாப்பு வழிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். பஸ்சில் செல்லும் பயணிகளும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






