search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    மாணவர்களுக்கு விற்பனை செய்ய கடத்தி வரப்பட்ட 1¼ கிலோ கஞ்சா பறிமுதல்- 2 வாலிபர்கள் கைது

    தாராபுரத்தில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் மாணவர்களுக்கு விற்பனை செய்ய கடத்தி வரப்பட்ட 1¼ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம்-ஒட்டன்சத்திரம் திண்டுக்கல் செல்லும் சாலையில் கோனேரிப்பட்டி அருகே சோதனை சாவடி அமைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் சோதனைச் சாவடி போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் பதில் அளித்தனர். அவர்களிடம் சோதனை நடத்திய போது இடுப்பு பகுதியில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருளான கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில் தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த முத்துராஜ் (வயது 37), திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டை சேர்ந்த காஜாமைதீன் (39) என்பதும், இருவரும் கம்பம் பள்ளத்தாக்கு, தேனி, பகுதியிலிருந்து கஞ்சாவை கடத்தி சென்று கோவை, திருப்பூரில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது.

    இதையடுத்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 1 ¼ கிலோ பதப்படுத்தப்பட்ட கஞ்சாவை தாராபுரம் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர். இருவரும் தாராபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டு தாராபுரம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
    Next Story
    ×