என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
    X
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    தேர்தல் பிரசாரம்- எடப்பாடி பழனிசாமி நாளை வேலூர் வருகை

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 5-ம் கட்டமாக நாளை ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
    வேலூர்:

    தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி 'வெற்றி நடைபோடுகிறது தமிழகம்' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார்.

    அந்த வகையில் 5-ம் கட்டமாக நாளை (செவ்வாய்க்கிழமை) ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

    காலை 10.30 மணிக்கு அரக்கோணம் தொகுதி கைனூர் கணபதி நகரில் மகளிருடன் ஆலோசனைக்கூட்டமும், 11.20 மணிக்கு சோளிங்கர் தொகுதி பாண்டியநெல்லூரில் இளைஞர்-இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் கலந்துரையாடல், அதன் பின்னர் மதியம் 1 மணியளவில் ராணிப்பேட்டை முத்துக்கடையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசுகிறார்.

    பின்னர் அவர் வேலூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மதிய உணவு சாப்பிடுகிறார். அதைத்தொடர்ந்து பிற்பகல் 3 மணியளவில் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதி கந்தனேரியில் மகளிருடன் ஆலோசனைக்கூட்டம், 5 மணிக்கு கே.வி.குப்பம் தொகுதியில் சென்ரான்பள்ளியில் இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் கலந்துரையாடல், அதைத்தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு வேலூர் தொகுதி வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே நடக்கும் பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். அதைத்தொடர்ந்து 10-ந் தேதி (புதன்கிழமை) திருப்பத்தூர் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

    எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. வடக்கு மண்டல ஐ.ஜி. (பொறுப்பு) சந்தோஷ்குமார் தலைமையில் டி.ஐ.ஜி. காமினி, போலீஸ் சூப்பிரண்டுகள் செல்வகுமார் (வேலூர்), மயில்வாகனன் (ராணிப்பேட்டை), விஜயகுமார் (திருப்பத்தூர்), அரவிந்தன் (திருவண்ணாமலை) ஆகியோர் மேற்பார்வையில் 1,000 போலடீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    குறிப்பாக முதல்-அமைச்சர் காரில் வரும் சென்னை-பெங்களூரு சாலையோரம் வேலூர் மாவட்ட பகுதிகளில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு போலீசார் இன்று (திங்கட்கிழமை) மாலை முதல் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×