search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகை அரசு தலைமை மருத்துவமனையில் கலெக்டர் பிரவீன் நாயர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்
    X
    நாகை அரசு தலைமை மருத்துவமனையில் கலெக்டர் பிரவீன் நாயர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்

    கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நாகை கலெக்டர் பிரவீன் நாயர்

    நாகை கலெக்டர் பிரவீன் நாயர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். பயம் இன்றி அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    நாகப்பட்டினம்:

    ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில்(மயிலாடுதுறை மாவட்டம் உள்பட) நாகை, மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளிலும், திருவெண்காடு, நல்லூர், ஆக்கூர், திருமருகல், வடுகச்சேரி, திருப்பூண்டி, தேவூர், தலைஞாயிறு, கரியாப்பட்டினம் உள்ளிட்ட அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது.

    முதல் கட்டமாக சுகாதாரத் துறையினருக்கு தடுப்பூசி போடப்பட்டது. பின்னர் டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இந்த நிலையில் நேற்று நாகை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியை கலெக்டர் பிரவீன் நாயர் போட்டுக்கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

    ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் முன்களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. தடுப்பூசி செலுத்தி கொள்வது குறித்து அனைவரையும் ஊக்குவிக்கும் வகையில் இன்று(அதாவது நேற்று) நான், கூடுதல் கலெக்டர் ஆகியோர் தடுப்பூசி செலுத்தி கொண்டோம். மருத்துவத்துறை சார்ந்தவர்கள் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கு கடந்த 20 நாட்களாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 12 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது. குறிப்பாக நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சீர்காழி அரசு மருத்துவமனைகளிலும், தரம் உயர்த்தப்பட்ட 9 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கொரோனா வைரஸ் தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது.

    தற்போது முன்களப்பணியாளர்களான வருவாய்த்துறை, போலீஸ்துறை, உள்ளாட்சித்துறை, சுகாதாரத்துறையுடன் இணைந்து கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் 6 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ள பதிவு செய்துள்ளனர்.

    முகாம்களில் ஒரு நாளைக்கு 100 பேருக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில் அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. எனவே அனைவரும் பயமின்றி தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் கூடுதல் கலெக்டர் பிரசாந்த், பயிற்சி கலெக்டர்கள் தீபனா விஷ்வேஸ்வரி, நாகை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் விஸ்வநாதன், துணை இயக்குனர்(சுகாதாரத்துறை) சண்முகசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×