search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம்
    X
    பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம்

    பள்ளிகள் திறப்பது பற்றிய பெற்றோரின் ஆதரவும், எதிர்ப்பும்

    பள்ளிகள் திறப்பது பற்றி பெற்றோர், மாணவர்கள் ஆதரித்தும், எதிர்த்தும் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
    மதுரை:

    பள்ளிகளை திறப்பது பற்றி பெற்றோர் தெரிவித்த ஆதரவு கருத்துகள் மற்றும் எதிர்ப்பு கருத்துகள் விவரம் வருமாறு:-

    10-ம் வகுப்பு மாணவியின் தாயார் ஜி.பிரியா:-

    ஆன்லைன் வகுப்பில் மாணவர்கள் ஆர்வம் காட்டி படிக்கவில்லை. இதை வைத்து எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வை மாணவர்கள் எப்படி எதிர்கொள்வார்கள்? பொதுத் தேர்வு உயர்கல்விக்கு மிகவும் முக்கியமான ஒன்று. எனவே நேரடி வகுப்புகள் தான் தற்போது சிறந்தது. பள்ளிகளை தற்போது திறந்து 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வியை கற்றுக்கொடுத்து பொதுத்தேர்வுக்கு தயார்படுத்த வேண்டும். அப்படி செய்தால் நன்றாக இருக்கும்.

    12-ம் வகுப்பு மாணவிகள் கீர்த்தனா, லோகேஷ்வரி:-

    தற்போது பள்ளிகளை திறக்க வேண்டாம். ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி மூலம் எப்படி வகுப்புகள் நடத்தப்படுகிறதோ? அதே நிலை தொடரட்டும். நாங்கள் பள்ளிகளுக்கு வரவில்லை என்றாலும், டியூசனுக்கு சென்று படித்துக்கொண்டு தான் வருகிறோம். எனவே பொதுத் தேர்வை எந்த பயமும் இல்லாமல் எதிர்கொள்வோம்.

    10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவிகளின் தாயார் ஜமுனா:-

    ஆன்லைன் படிப்பை சரிவர கவனிப்பது கிடையாது. பெருமளவிலான நேரத்தை சினிமா பாடல்கள் கேட்பதற்காக தான் செல்போனை பயன்படுத்துகிறார்கள். பொதுத்தேர்வு வர இருப்பதால் நேரடியாக வகுப்புகளை நடத்தினால் தான் சிறந்ததாக இருக்கும். சினிமா தியேட்டர், வணிக வளாகங்களில் பரவாத கொரோனா வைரஸ் பள்ளிகளில் தான் பரவிவிட போகிறதா? பள்ளி நிர்வாகம் பாதுகாப்பாக பார்த்துக்கொண்டால் அது போதும். நாங்களும் பாதுகாப்பாக பிள்ளைகளை அனுப்பி வைப்போம்.

    10-ம் வகுப்பு மாணவியின் தாயார் ரேகா:-

    பிள்ளைகளின் உயிர்தான் முக்கியம். படிப்பு எப்போது வேண்டுமானாலும் படித்துக்கொள்ளலாம். புதுவகையான வைரஸ் இப்போது பரவி வருகிறது என்று சொல்கிறார்கள். தடுப்பூசி நாடு முழுவதும் வரட்டும். நோய்த்தொற்று இல்லை என்ற சகஜநிலை திரும்பிய பிறகு, பள்ளிகளை திறக்கலாம். இப்போதைக்கு பள்ளிகள் திறப்பு வேண்டாம். படிப்பை பற்றிய பிரச்சினை இல்லை. அவர்களை தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகளுக்கு அனுப்புவதற்கு பயமாக இருக்கிறது.

    10-ம் வகுப்பு மாணவி யோகேஸ்வரி:-

    கல்வி தொலைக்காட்சி, ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் நடத்துவது ஒரு மாற்று ஏற்பாடு தான். நேரடி வகுப்புகள் மூலம் ஆசிரியர்கள் பாடம் நடத்தும் போது தான் அது நன்றாக புரியும். எனவே பள்ளிகளை திறக்க வேண்டும்.

    10-ம் வகுப்பு மாணவியின் தாயார் ஆயிஷா பர்வீன்:-

    வேறு வழி இல்லை என்ற பட்சத்தில் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டிய நிலை இருக்கிறது. ஆன்லைன் வகுப்புகளுக்கும், நேரடி வகுப்புகளுக்கும் ஏராளமான வித்தியாசங்கள் இருக்கின்றன. இப்போதுள்ள சூழ்நிலையில் பள்ளிக்கு அனுப்ப பயமாகத்தான் உள்ளது. ஆனால் எங்களுக்கு வேறு வழியில்லை. அதற்கேற்றாற்போல் பள்ளிகளில் முன்னேற்பாடுகள் செய்யப்படவேண்டும். அப்படி செய்தால் அனுப்பி வைப்போம்.
    Next Story
    ×