என் மலர்
செய்திகள்

கூடங்குளம் அருகே போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு சென்றவர் மீது வழக்கு
நெல்லை:
கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரையை சேர்ந்தவர் சுமன் (வயது 43).
இவர் போலியாக வேறு ஒருவர் பெயரில் பாஸ் போர்ட் எடுத்து சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்றார். தற்போதும் அவர் அங்கு தங்கி இருந்து வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் சுமன் வெளிநாட்டில் இருந்தபடி தனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க ஆன்லைனில் விண்ணப்பம் செய்தார். இவரது விண்ணப்பம் குறித்து போலீசார் இடிந்தகரை சென்று விசாரணை நடத்தினர். அப்போது சுமன், போலி பெயரில் பாஸ்போர்ட் எடுத்து வெளிநாடு சென்றது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து கூடங்குளம் போலீசார் சுமன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் போலி பாஸ்போர்ட்டில் சவுதி அரேபியா சென்றது குறித்து, பாஸ்போர்ட் அலுவலகம் மூலம் சவுதி அரேபியா தூதரகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து, இடிந்தகரை மக்கள் தொடர் போராட்டம் நடத்தினார்கள். இதுதொடர்பாக இடிந்த கரையை சேர்ந்த பலர் மீது கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனால் ஏராளமானவர்கள் பாஸ்போர்ட் பெற முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இந்த சூழ்நிலையில் சுமன் போலி பாஸ்போர்ட் எடுத்து வெளிநாடு சென்றது தற்போது தெரிய வந்துள்ளது.