search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முல்லைப்பெரியாறு அணை
    X
    முல்லைப்பெரியாறு அணை

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 132 அடியை தாண்டியது

    நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழையால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 132 அடியை தாண்டியது.
    கூடலூர்:

    தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட 5 மாவட்ட மக்களின் ஜீவாதாரமாக முல்லைப்பெரியாறு அணை விளங்குகிறது. இந்த அணையை நம்பி கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் மட்டும் 17 ஆயிரம் ஏக்கர் பரப்பில் விவசாய நிலத்தில் இருபோக பயிர் சாகுபடி செய்யப்படுகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை காலத்தில் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும். ஆனால் இந்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் போதிய அளவு மழை பெய்யாததால் அணையின் நீர்மட்டம் குறைந்து காணப்பட்டது. கடந்த 3-ந்தேதி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 115 அடியாக இருந்தது.

    இதற்கிடையே கேரளா மற்றும் முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகள், தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தது. கடந்த 5 தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது. வினாடிக்கு 7 ஆயிரம் கன அடி வீதம் நீர்வரத்து இருந்தது.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 17 ஆயிரத்து 740 கன அடியாக அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. நேற்று முன்தினம் காலை நிலவரப்படி 125 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், நேற்று 130 அடியாக உயர்ந்தது. அதாவது ஒரேநாளில் 5 அடி உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் கேரளாவில் பெய்துவரும் கனமழை காரணமாக இன்று முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 132 அடியை தாண்டியது. அணை நீர்மட்டம் 133.00 அடியாகவும், நீர் இருப்பு 5,586 மில்லியன் கனஅடியாகவும் உள்ளது.

    முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து 11,533 கனஅடியாக உள்ளது. அணையிலிருந்து 1,671 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையில் நீர்மட்டம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×