search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம்
    X
    வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம்

    வேலூரில் இறைச்சிக்கடைகளை திறக்க புதிய கட்டுப்பாடுகள்- கலெக்டர் தகவல்

    வேலூர் மாவட்டத்தில் இறைச்சிக்கடைகளை திறக்க புதிய கட்டுப்பாடுகளை கலெக்டர் சண்முகசுந்தரம் விதித்துள்ளார்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக இறைச்சி, மீன் கடைகள் திங்கள், புதன், சனிக்கிழமைகளில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும் இயங்க வேண்டும். மற்ற நாட்களில் கடைகளில் விற்பனை செய்யக்கூடாது என்று கலெக்டர் சண்முகசுந்தரம் கடந்த 1-ந் தேதி தெரிவித்தார்.

    இந்த நிலையில் வேலூர் சத்துவாச்சாரி, சைதாப்பேட்டை பகுதிகளில் ஓட்டல்களுக்காக கோழிக்கறி வெட்டிய இறைச்சிக்கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர். மேலும் அங்கிருந்த கோழிக்கறிகள் அழிக்கப்பட்டது.

    இதையடுத்து வேலூர் மாவட்ட கறிக்கோழி விற்பனையாளர்கள் சங்க நிர்வாகிகள், கலெக்டரை நேரில் சந்திந்து கூடுதல் நேரம் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்பது உள்பட சில கோரிக்கைகளை முன்வைத்தனர். இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், வருவாய்த்துறையினருடன் கலெக்டர் ஆலோசனைக்கூட்டம் நடத்தினார். இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் இறைச்சிக்கடைகளை திறப்பது தொடர்பாக புதிய கட்டுப்பாடுகளை கலெக்டர் விதித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது-

    மாவட்டம் முழுவதும் இறைச்சிக்கடைகள் திங்கள், புதன், சனிக்கிழமைகளில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை என்பதற்கு பதிலாக இன்று (வெள்ளிக்கிழமை) முதல் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் காலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை இறைச்சிக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது. மீன்மார்க்கெட்டுகள் ஏற்கனவே அறிவித்தப்படி சனிக்கிழமை அன்றே இயங்கும்.

    அதைத்தவிர செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் இறைச்சிக்கடைகள் காலை 5 மணி முதல் காலை 7 மணி வரை ஓட்டல்களுக்கு சிக்கன், மட்டன் வழங்குவதற்காக மட்டும் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது. ஓட்டல்களை தவிர தனிநபர்களுக்கு விற்பனை செய்ய அனுமதி கிடையாது. இது, இறைச்சி மொத்த விற்பனை கடைகளுக்கு மட்டுமே பொருந்தும். இந்த நடைமுறைகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

    இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×