search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஜயா தனது குழந்தையுடன் இருப்பதை காணலாம்
    X
    விஜயா தனது குழந்தையுடன் இருப்பதை காணலாம்

    காஞ்சிபுரத்தில் பிறந்த குழந்தைக்கு ‘அத்திவரதர்’ பெயர் சூட்டப்பட்டது

    காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனத்துக்கு வந்தபோது ஆண்குழந்தை பிறந்து உள்ளதால் குழந்தைக்கு ‘அத்திவரதர்’ என்று பெயரிட்டு உள்ளதாக பெற்றோர் தெரிவித்தனர்.
    காஞ்சிபுரம்:

    40 ஆண்டுகளுக்கு ஒருமுறை தரிசனம் தரும் அத்திவரதரை வழிபடுவதை பக்தர்கள் வாழ்நாள் பாக்கியமாக கருதுகிறார்கள். இதனால் அத்திவரதர் தரிசனத்துக்கு பக்தர்கள் தொடர்ந்து குவிந்து வருகிறார்கள்.

    நேற்று காலை வேலூர் மாவட்டம் பாணர்வரம் கிராமத்தை சேர்ந்த அசோக் குமார் மற்றும் அவரது மனைவியான நிறைமாத கர்ப்பிணியாக இருந்த விமலா ஆகியோர் அத்தி வரதரை வழிபட வந்து இருந்தனர். அவர்கள் தரிசனம் முடிந்து திரும்பி வந்தபோது விமலாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

    உடனடியாக அவரை கோவிலின் 16 கால் மண்டபம் பகுதியில் உள்ள மருத்துவ முகாமுக்கு அழைத்து சென்றனர்.

    அப்போது அங்கிருந்த டாக்டர் ஜான்சிராணி மற்றும் சீனியர் நர்சு யோக வள்ளி ஆகியோர் விமலாவுக்கு பிரசவம் பார்த்தனர். சிறிது நேரத்தில் விமலாவுக்கு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. 3 கிலோ எடையில் குழந்தை ஆரோக்கியமாக இருந்தது.

    இதைத்தொடர்ந்து விமலாவும், குழந்தையும் 108 ஆம்புலன்சு மூலம் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர். தாயும் சேயும் நலமாக உள்ளனர்.

    இதற்கிடையே அத்திவரதர் தரிசனத்துக்கு வந்தபோது ஆண்குழந்தை பிறந்து உள்ளதால் குழந்தைக்கு ‘அத்திவரதர்’ என்று பெயரிட்டு உள்ளதாக விமலாவும், அவரது கணவர் அசோக்குமாரும் தெரிவித்து உள்ளனர்.

    இதுகுறித்து அசோக்குமார் கூறும்போது, ‘செவ்வாய்க்கிழமை இரவு தரிசனம் செய்ய வரிசையில் காத்திருந்தோம். மறுநாள் (நேற்று) காலையில் தான் சாமியை வழிபட உள்ளே சென்றோம். நாங்கள் வரிசையில் நிற்கும்போது மனைவி விமலா கர்ப்பிணியாக இருந்ததை கண்டதும் விரைவாக தரிசனத்துக்கு அனுப்பினர்.

    சாமியை வழிபட்டு திரும்பியபோது விமலாவுக்கு பிரசவவலி ஏற்பட்டது. உடனடியாக அவளை அருகில் உள்ள மருத்துவ முகாமில் சேர்த்தோம். அங்கு ஆண் குழந்தை பிறந்தது. அத்திவரதரை வழிபட வந்தபோது சுகப்பிரசவத்தில் ஆண்குழந்தை பிறந்தது மகிழ்ச்சியாக உள்ளது. குழந்தைக்கு ‘அத்திவரதர்’ என்று பெயர் வைக்க உள்ளோம்’ என்றார்.

    விமலாவுக்கு பிரசவம் பார்த்த டாக்டர் ஜான்சி ராணி, நர்சு யோகவள்ளி ஆகியோர் கூறும்போது, ‘தாயும் குழந்தையும் நலமாக உள்ளனர். அவர்கள் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    அத்திவரதர் தரிசனத்துக்கு வந்தபோது குழந்தை பிறந்ததால் அத்தி வரதர் என்று பெயர் வைக்கும்படி ஏராளமான பக்தர்கள் அந்த தம்பதியிடம் கேட்டுக்கொண்டனர். அவர்களும் அத்திவரதர் பெயர் வைக்க உள்ளதாக கூறி இருக்கிறார்கள். 40 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விழாவில் தரிசனத்துக்கு வந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்து இருப்பது அரிய நிகழ்வு ஆகும்’’ என்றனர்.
    Next Story
    ×