என் மலர்
செய்திகள்

திருவெண்ணைநல்லூர் அருகே விவசாயி வீட்டில் நகை- பணம் கொள்ளை
திருவெண்ணைநல்லூர்:
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள இளந்துறை கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் குப்புசாமி(வயது 45). விவசாயி. இவர் நேற்று இரவு குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார்.
நள்ளிரவு நேரத்தில் வந்த மர்மமனிதர்கள் குப்புசாமி வீட்டின் முன்பக்கம் இரும்பு கேட்டில் உள்ள பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். பின்பு அவர்கள் அருகில் உள்ள கதவை உடைக்க முயன்றனர். ஆனால் கதவை உடைக்க முடியவில்லை.
இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கு கிடந்த அரிவாள் மற்றும் கடப்பாரையை எடுத்துக்கொண்டு வெளியே வந்தனர்.
பின்பு அவர்கள் அருகில் உள்ள மணக்குப்பம் கிராமத்தில் உள்ள விவசாயியான ரமேஷ்(42) என்பவர் வீட்டுக்கு சென்றனர். ரமேஷ் தனது தம்பிகள் ராஜா, குமார், சீனு ஆகியோருடன் ஒரே வீட்டில் கூட்டுகுடும்பமாக வசித்து வருகிறார்கள். அங்கு சென்ற கொள்ளையர்கள் ரமேஷ் வீட்டின் பின்பக்க கதவை கடப்பாரையால் உடைத்து உள்ளே புகுந்தனர்.
வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 23 பவுன் தங்க நகைகள், ரூ.6½ லட்சம் ரொக்க பணத்தை கொள்ளையடித்து விட்டு வெளியே வந்தனர். அதன்பின்பு கொள்ளையர்கள் கடப்பாரை மற்றும் அரிவாளை அங்குள்ள குப்பையில் வீசிவிட்டு சென்றனர்.
இன்று காலை ரமேஷ் குடும்பத்தினர் எழுந்துபார்த்தபோது வீட்டில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக்கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பிரோவில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகை- பணம் கொள்ளை போயிருந்தது. கொள்ளையர்கள் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்ததை அறிந்தனர்.
இந்தசம்பவம் குறித்து ரமேஷ் திருவெண்ணைநல்லூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர்.
பின்பு அவர்கள் கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த கொள்ளையில் துப்புதுலக்க தடயவியல் நிபுணர் குமார் சம்பவ இடம் விரைந்து சென்று கொள்ளை நடந்த வீட்டில் இருந்த கைரேகைகளை பதிவு செய்தார்.
விவசாயி வீட்டின் கதவை உடைத்து நகை- பணம் கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்தசம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.