search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை செய்யப்பட்ட மாணவி திலகவதி
    X
    கொலை செய்யப்பட்ட மாணவி திலகவதி

    விருத்தாசலம் அருகே கல்லூரி மாணவி கொலையில் வாலிபர் கைது

    விருத்தாசலம் அருகே கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்டது தொடர்பாக வாலிபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கருவேப்பிலங்குறிச்சியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 50). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி கொளஞ்சி.

    இவர்களது மகள் திலகவதி (19). இவர் விருத்தாசலம்- எருமனூர் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    நேற்று காலை சுந்தரமூர்த்தி வேலை தொடர்பாக வெளியூர் சென்று விட்டார். கொளஞ்சி மயிலாடுதுறையில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றிருந்தார்.

    காலையில் மாணவி திலகவதி வழக்கம்போல் கல்லூரிக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினார். வீட்டில் அவர் தனியாக இருந்தார்.

    அந்த நேரத்தில் கருவேப்பிலங்குறிச்சி அடுத்த பேரளையூரை சேர்ந்த ஆகாஷ் (19) என்ற வாலிபர் வீட்டுக்குள் புகுந்தார். அவர் திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திலவதியின் உடலில் சரமாரியாக குத்தினார்.

    கத்திக்குத்தில் காயம் அடைந்த திலகவதி கூச் லிட்டார். ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார்.

    மாணவியின் அலறல் சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். இதையறிந்ததும் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    ரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவி திலகவதியை மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மாணவி திலகவதி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்த தகவல் அவரது பெற்றோருக்கு தெரிய வந்தது. அவர்கள் அலறியடித்து கொண்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அங்கு பிணமாக கிடந்த மகளை பார்த்து கதறி அழுதனர்.

    இந்த கொலை குறித்து விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்தியன், இன்ஸ்பெக்டர் ஷாகுல் அமீது மற்றும் போலீசார் திலகவதியின் குடும்பத்தினரிடமும், அக்கம் பக்கத்தினரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

    இதையடுத்து தலைமறைவாக இருந்த ஆகாஷை தீவிரமாக தேடிவந்தனர். இன்று அதிகாலை பேரளையூரில் பதுங்கி இருந்த ஆகாஷை போலீசார் பிடித்தனர். பின்பு அவரை விருத்தாசலம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், ஆகாஷ் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்துள்ளார். பின்பு தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வீட்டில் இருந்து வந்தது தெரிய வந்தது.

    மாணவியை ஆகாஷ் கொலை செய்ததற்கு ஒருதலை காதல் காரணமா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×