search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூரில் சைகை மூலம் ஓட்டு சேகரித்த பிரேமலதா.
    X
    வேலூரில் சைகை மூலம் ஓட்டு சேகரித்த பிரேமலதா.

    வேலூரில் சைகை மூலம் பிரசாரம் செய்த பிரேமலதா

    வேலூரில் இரட்டை விரலை காட்டி சைகை மூலம் வாக்கு சேகரித்ததால், பிரேமலதா விஜயகாந்தின் பேச்சை கேட்க ஆவலாக அங்கு கூடியிருந்த கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். #LokSabhaElections2019 #PremalathaVijayakanth
    வேலூர்:

    வேலூர் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் புதிய நீதிக்கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார். அவருக்கு தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று இரவு 9 மணியளவில் வேலூர் சார்பனாமேட்டில் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    ஆனால் பிரேமலதா விஜயகாந்த் இரவு 10.15 மணிக்கு தான் சார்பனாமேட்டிற்கு வந்தார் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி இரவு 10 மணிக்கு மேல் மைக் மூலம் வாக்கு சேகரிக்க கூடாது என்பதால், பிரேமலதா விஜயகாந்த் மற்றும் வேட்பாளர் ஏ.சி.சண்முகம் ஆகியோர் தங்கள் கைகளை உயர்த்தி இரட்டை விரலை காட்டி சைகை மூலம் வாக்கு சேகரித்தனர். பிரேமலதா விஜயகாந்தின் பேச்சை கேட்க ஆவலாக அங்கு கூடியிருந்த ஏராளமான பெண்கள் மற்றும் கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    முன்னதாக குடியாத்தம், வாணியம்பாடியில் அவர் பேசியதாவது:-

    இந்த கூட்டணி மாபெரும் வெற்றி கூட்டணி. 40 பாராளுமன்ற தொகுதிகளிலும், 18 சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். இந்த ஆட்சி தொடர்ந்து நடைபெறும். இந்த கூட்டணி என்றைக்கும் ஆட்சிக்கு பக்க பலமாக இருக்கும்.

    தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் தே.மு.தி.க.வை கேவலப்படுத்த நினைத்தார். கடவுள் உங்களை கேவலப்படுத்தி விட்டார். ஒட்டுமொத்த வேலூர் மக்களுக்கும் உங்கள் நிலை தெரிந்து விட்டது. பாதாளத்தில் தோண்ட தோண்ட பணம் வருகிறது.

    அனைத்து இடங்களிலும் அ.தி.மு.க.கூட்டணி வெற்றி பெறுவது உறுதி.

    வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் இந்த முறை கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். அதற்காக அ.தி.மு.க, தே.மு.தி.க, பா.ம.க, த.மா.கா, சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும், இளைஞர்களும் ஒற்றுமையாக இருந்து வெற்றிக்கு பாடுபட வேண்டும்.

    இவர் வெற்றி பெற்று பாராளுமன்றத்துக்கு சென்ற உடன் வாணியம்பாடி தொகுதியில் நீண்ட நாட்களாக உள்ள ரெயில்வே பாலம் அமைக்க நடவடிக்கை எடுப்பார். வேலூர் பாராளுமன்ற தொகுதியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்கவும், கிராம மக்களுக்கு மருத்துவ சிகிச்சை, தரமான குடிநீர் வசதி, தரமான சாலைகளை அமைத்திடவும் பாடுபடுவார்.

    நான் இந்த மாவட்டத்தை சேர்ந்தவள். எனது கணவர் இந்த மாவட்டத்து மருமகன். வாணியம்பாடி மக்களின் அனைத்து கனவுகளையும் நனவாக்க ஏ.சி.சண்முகத்தை வெற்றி பெற செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.  #LokSabhaElections2019 #PremalathaVijayakanth



    Next Story
    ×