என் மலர்
செய்திகள்

சிறுமியை கற்பழித்த வழக்கில் வாலிபருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை- கோர்ட்டு தீர்ப்பு
தஞ்சாவூர்:
தஞ்சை அருகே மானோஜிப்பட்டி பகுதி அன்னை சிவகாமி நகரை சேர்ந்தவர்கள் சிறுமியின் பெற்றோர். இவர்கள் கடந்த 4.6.2012 அன்று அப்பகுதியில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் நடந்த உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சிறுமியுடன் சென்றுள்ளனர். அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை ரெட்டிப்பாளையம் காமாட்சிபுரம் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியான சத்தியராஜ்(வயது25) என்பவர் மிட்டாய் வாங்கிக் கொடுத்து அருகில் உள்ள சுடுகாட்டிற்கு மறைவான இடத்திற்கு அழைத்து சென்று கற்பழித்துள்ளார்.
இதில் மயங்கிய சிறுமியை சத்தியராஜ் தூக்கி வந்து ஒரு வீட்டு வாசலில் போட்டு விட்டு தப்பி சென்றார். அப்போது சிறுமியை காணாததால் அவரை தேடிவந்த சிறுமியின் உறவினர் சத்தியராஜை பார்த்து விட்டு விரட்டி சென்றுள்ளார்.
இது குறித்து சிறுமியின் தாய் தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரா விசாரணை நடத்தி சத்தியராஜை கைது செய்தார். இந்த வழக்கு பற்றிய விசாரணை தஞ்சை மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது.
இந்நிலையில் இன்று காலை இந்த வழக்கில் மகளிர் கோர்ட்டு நீதிபதி பாலகிருஷ்ணன் வழங்கிய தீர்ப்பில், சத்தியராஜிக்கு சிறுமியை கடத்தியதற்காக 7 ஆண்டும், சிறுமியை கற்பழித்த குற்றத்திற்கு 10 ஆண்டுகள் என 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார். மேலும் ரூ.2 ஆயிரம் அபராதமும், 17 ஆண்டுகள் சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தர விட்டார்.
இதையடுத்து சத்தியராஜை தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்து திருச்சி மத்திய சிறையில் கொண்டு அடைத்தனர்.
சிறுமியை கற்பழித்த வழக்கில் வாலிபருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.