search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடும் எதிர்ப்புக்கு மத்தியில் தமிழிசை சவுந்தரராஜன் வேட்பு மனு ஏற்பு
    X

    கடும் எதிர்ப்புக்கு மத்தியில் தமிழிசை சவுந்தரராஜன் வேட்பு மனு ஏற்பு

    தூத்துக்குடி தொகுதியில் திமுக எதிர்ப்பு தெரிவித்தால் நீண்ட நேர பரிசீலனைக்குப் பிறகு பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனின் வேட்பு மனு ஏற்கப்பட்டது. #LokSabhaElection2019 #TamilisaiSoundararajan #TamilisaiNomination
    தூத்துக்குடி:

    தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கும், காலியாக உள்ள 18 சட்டசபை தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் 18-ந்தேதி தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி கடந்த‌ 19-ந்தேதி வேட்பு மனு தாக்கல் தொட‌ங்கியது. மனுதாக்கல் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. கடைசி நாளான நேற்று அனைத்து தொகுதிகளிலும் ஏராளமானோர் மனு தாக்கல் செய்தனர்.



    தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. சார்பில் கனிமொழி எம்.பி., பா.ஜனதா சார்பாக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் உள்பட 48 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனு பரிசீலனை மாவட்ட கலெக்டரும் தேர்தல் அதிகாரியுமான சந்தீப் நந்தூரி முன்னிலையில் இன்று நடைபெற்றது.

    அப்போது தமிழிசை சவுந்தரராஜன் வேட்பு மனுவை பரிசீலனை செய்ய தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் அவர் இயக்குனராக உள்ள விவரத்தை வேட்பு மனுவில் குறிப்பிடவில்லை என தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தமிழிசை சவுந்தரராஜன் வேட்பு மனு மீதான பரிசீலனை மதியம் 1.30 வரை நிறுத்தி வைக்கப்பட்டது.

    அதன்பின்னர், வேட்பு மனு பரிசீலனை தொடங்கியபோதும் திமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எனவே, தமிழிசையின் மனுவில் உள்ள அனைத்து அம்சங்களையும் தீவிரமாக பரிசீலனை செய்தனர். அதன்பின்னர் அவரது வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் ஏற்றுக்கொண்டார். #LokSabhaElection2019 #TamilisaiSoundararajan #TamilisaiNomination
    Next Story
    ×