search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சையில் பிளஸ்-1 மாணவரை கடத்தி கொத்தடிமையாக விற்ற சக மாணவர்கள்
    X

    தஞ்சையில் பிளஸ்-1 மாணவரை கடத்தி கொத்தடிமையாக விற்ற சக மாணவர்கள்

    அரசு பள்ளி மாணவர்கள் கடத்தல் கும்பலுடன் சேர்ந்து சக மாணவனை கடத்தி கொத்தடிமையாக அனுப்பிய சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கோடியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த தினேஷ் (வயது 16) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தஞ்சையில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறான்.

    அதேபள்ளியில் திருக்கருக்காவூரை சேர்ந்த ராஜா (17), வளையபேட்டையை சேர்ந்த சரவணன், மாத்தூரை சேர்ந்த சந்திரன், கரந்தட்டான் குடியை சேர்ந்த சுந்தர் (மேலே உள்ள 4 மாணவர்களின் பெயரும் மாற்றப்பட்டுள்ளது) இவர்கள் 4 பேரும் அதே அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

    கடந்த டிசம்பர் 4-ந் தேதி தினேஷ் காலை வழக்கம் போல்பள்ளிக்கு புறப்பட்டு சென்றார். மீண்டும் மாலை வீடு திரும்பவில்லை. தினேசின் தந்தை வெளியூரில் வேலை பார்த்து வந்ததால் அவரது தாய் மகனை பல இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் காணவில்லை. இதையடுத்து தன்னுடைய கணவருக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து ஊருக்கு வந்த தினேசின் தந்தை மாயமான மகனை சில நாட்கள் தேடி அலைந்துள்ளார். ஆனால் மகன் எங்கு சென்றான் என்ற தகவல் கிடைக்காததால் தஞ்சையில் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இந்த நிலையில் போலீசில் புகார் அளித்து நீண்ட நாட்கள் ஆகியும் போலீசார் தினேசை கண்டு பிடிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    இதையடுத்து இனி போலீசாரை நம்பி பயன் இல்லை என தன்னுடய மகனை கண்டுபிடிக்க தானே களத்தில் இறங்கி விசாரணையில் இறங்கினார்.

    அதன்படி தினேஷ் படித்த அரசு பள்ளிக்கு சென்று பள்ளி தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தியபோது டிசம்பர் 4-ந் தேதி பள்ளிக்கு வந்த தினேஷ் அதேபள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும் ராஜா, சரவணன், சந்திரன், சுந்தர் ஆகிய 4 மாணவர்களுடன் பள்ளியை விட்டு சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து அந்த 4 மாணவர்களது வீடுகளுக்கும் சென்று தன்னுடைய மகனை எங்கு அழைத்து சென்றீர்கள் என கேட்டுள்ளார். அப்போது தாங்கள் அழைத்து செல்லவில்லை என அடித்து கூறினர்.

    அதனை தொடர்ந்து அந்த 4 மாணவர்கள் குறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் விசாரித்த போது அவர்கள் 4 பேரும் அடிக்கடி பள்ளிக்கு வராமல் ஊர் சுற்றுபவர்கள் அவர்கள் தீய பழக்கங்கள் உள்ளவர்கள் என தெரிவித்தார்.

    இதற்கிடையே தினேசின் தந்தைக்கு, 4 மாணவர்கள் மீதும் சந்தேகம் ஏற்பட்டது.

    இதனால் கடந்த மாதம் 14-ந் தேதி மாணவர் சந்திரனின் வீட்டிற்கு சென்ற தினேசின் தந்தை உங்களுடைய மகனும் அவனது நண்பர்களும் சேர்ந்து எனது மகனைகொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கிறேன். எனவே நிதிமன்றத்தில் ஆட் கொணர்வு மனு தாக்கல் செய்ய உள்ளேன் என கூறி விட்டு வந்தார்.

    இந்நிலையில் கடந்த 18-ந்தேதி காலையில் தினேசின் தந்தை செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்ட அந்த 4 மாணவர்களில் ஒருவரான ராஜா உங்களுடைய மகன் கரம்பத்தூர் பகுதியில் பார்த்ததாக கூறிவிட்டு போனை கட் செய்துள்ளான்.

    இதையடுத்து அங்கு சென்று தேடி பார்த்த போது தினேஷ் ஆவூர் சாலையில் உள்ள பாலத்தில் சுய நினைவை இழந்தபடி மயக்கத்தில் இருந்தான். அவனது உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தன.

    தினேசை மீட்டு அவனுடைய தந்தை விசாரித்தார். அப்போது சம்பவத்தன்று தனது நண்பர்கள் 4 பேரும் தன்னை பள்ளியை விட்டு வெளியே வா. முக்கியமான இடத்திற்கு அழைத்து செல்கிறோம் என வலுக்கட்டாயமாக அழைத்து சென்றனர்.

    பின்னர் 4 பேரும் என்னை கொடிமரத்து மூலை அருகே உள்ள டீக்கடைக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு அவர்கள் கும்பகோணத்தை சேர்ந்த மணி என்பவரிடம் தன்னை அறிமுகம் செய்தனர். அவர்கள் தனியாக சென்று பேசினர். மணி அவர்கள் 4 பேருக்கும் பணம் கொடுத்தார். அதன்பின்னர் தனக்கு டீ வாங்கி கொடுத்தனர். அதன்பிறகு நான் மயக்கம் அடைந்துவிட்டேன். முழித்து பார்த்த போது திருப்பூரில் ஒரு அறையில் கிடந்தேன்.

    அங்கிருந்த சிலர் தனக்கு சாப்பாடு போட்டு அடித்து துன்புறுத்தி கொத்தடிமையாக வேலை வாங்கியதாக கூறியுள்ளான்.

    இதையடுத்த தினேசின் தந்தை அந்த 4 மாணவர்களிடமும் சென்று இதுகுறித்து மிரட்டி விசாரித்த போது தங்களுக்கும் இதுபோன்ற மாணவர்களை கடத்தும் கும்பலுக்கும் தொடர்பு இருப்பதாகவும் அவர்கள் நாங்கள் அழைத்து விடும் மாணவர்களுக்கு ஏற்றாற்போல் பணம் தருவார்கள் என கூறியுள்ளனர். நாங்கள் இதுபோன்று இனிமேல் செய்யமாட்டோம். தங்களை போலீசில் மாட்டி விட வேண்டாம் என கெஞ்சியுள்ளனர்.

    பள்ளி மாணவர்கள் என்பதால் தினேசின் தந்தை அவர்களை கண்டித்து விட்டு சென்றுவிட்டார்.

    Next Story
    ×