search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் டாக்டர் வீட்டில் ரூ.35 லட்சம் நகை-பணம் கொள்ளை
    X

    புதுவையில் டாக்டர் வீட்டில் ரூ.35 லட்சம் நகை-பணம் கொள்ளை

    புதுவையில் டாக்டர் வீட்டில் ரூ.35 லட்சம் மதிப்பிலான பணம்-நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை தட்டாஞ்சாவடி வி.வி.பி. நகரை சேர்ந்தவர் வடிவேல் பாண்டி (வயது67). டாக்டரான இவர் புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் தனக்கு சொந்தமான இடத்தில் கிளினிக் வைத்து நடத்தி வருகிறார்.

    கடந்த 26-ந்தேதி மாலை வீட்டை பூட்டிவிட்டு வடிவேல்பாண்டி தனது மனைவியுடன் உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். நள்ளிரவில் வீடு திரும்பிய அவர்கள் பயண களைப்பில் படுக்கை அறைக்கு சென்று தூங்கினர்.

    நேற்று காலை வடிவேல் பாண்டி கண்விழித்து கழிவறைக்கு சென்றார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டின் ஒரு அறையில் இருந்த 2 பீரோக்களும் திறந்து கிடந்தன. பீரோவில் இருந்த 160 பவுன் நகை மற்றும் ரொக்க பணம் ரூ.5½ லட்சம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.35 லட்சமாகும். அதிகாலை வேளையில் யாரோ மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து மறைவான இடத்தில் வைத்திருந்த பீரோ சாவியை எடுத்து திறந்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்று உள்ளனர்.

    இதுகுறித்து டாக்டர் வடிவேல் பாண்டி கோரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் போலீஸ் சூப்பிரண்டு மாறனும் கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.

    தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை பதிவு செய்தனர். அதோடு டாக்டர் வீடு மற்றும் பக்கத்து வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் டாக்டர் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும் தெரிந்த நபர்கள் இந்த கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.
    Next Story
    ×