search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாநில அந்தஸ்து கோரி புதுவை அரசியல் கட்சியினர் நாளை டெல்லியில் ஆர்ப்பாட்டம்
    X

    மாநில அந்தஸ்து கோரி புதுவை அரசியல் கட்சியினர் நாளை டெல்லியில் ஆர்ப்பாட்டம்

    மாநில அந்தஸ்து கோரி முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நாளை டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. #narayanasamy #kiranbedi

    புதுச்சேரி:

    யூனியன் பிரதேசமான புதுவைக்கு நீண்ட பல ஆண்டுகளாக மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.

    நாட்டிலேயே டெல்லியும், புதுவையும் மட்டுமே சட்ட மன்றம் உள்ள யூனியன் பிரதேசமாக திகழ்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட மன்றம் இருந்தாலும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அங்கமாகவே புதுவை யூனியன் பிரதேசம் கருதப்படுகிறது.

    இதனை உறுதிப்படுத்தும் வகையில் புதுவை சட்ட சபைக்கு மத்திய அரசு நேரடியாக 3 எம்.எல்.ஏ.க் களை நியமித்தது. மத்திய அரசின் நேரடி நியமனம் செல்லும் என ஐகோர்ட்டு தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தது. அதோடு நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு வாக்களிக்கும் உரிமையும் உண்டு என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    இது தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தொடர்ந்து நீடிப்பதில் சிக்கலை ஏற்படுத்தும். சட்ட மன்ற ஜனநாயகத்தை கேள்வி குறியாக்கியுள்ளது. அதே நேரத்தில் புதுவை கவர்னராக இருக்கும் கிரண்பேடியும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை விட தனக்கே அதிகாரம் உள்ளது என கூறி மாநில நிர்வாகத்தில் தலையிட்டு வருகிறார்.


    நியமன எம்.எல்.ஏ. விவகாரம், கவர்னர் கிரண்பேடி நடவடிக்கை ஆகியவற்றால் புதுவை மாநில உரிமைக்கு பங்கம் ஏற்பட்டிருப்பதாக அரசியல் கட்சிகள் கருதுகின்றன. மாநில உரிமைகளை பெற மாநில அந்தஸ்தே தீர்வு என ஆளும் காங்கிரஸ் கட்சி தலைமையில் நடந்த அனைத்து அரசியல் கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

    புதுவை மாநில அந்தஸ்து வழங்க வேண்டு. கவர்னர் கிரண்பேடியை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல கட்ட போராட்டங்கள் நடத்த அனைத்து கட்சிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. முதல் கட்டமாக டெல்லியில் ஜந்தர் மந்தர் முன்பு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு புதுவை அரசியல் கட்சிகள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க புதுவையில் இருந்து டெல்லி செல்லும் வாராந்திர டெல்லி ரெயிலில் 21 அரசியல் கட்சிகள், அமைப்புகளை சேர்ந்த 420 தொண்டர்கள் புறப்பட்டு சென்றனர். இவர்கள் நாளை அதிகாலை 3 மணியளவில் டெல்லியை அடைகின்றனர்.

    இதற்கிடையே இன்று (வியாழக்கிழமை) முதல்- அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கின்றனர். டெல்லியில் புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நாளை ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    ஆர்ப்பாட்டத்தின் முடிவில் புதுவை அரசியல் கட்சி தலைவர்கள் மத்திய மந்திரிகள் மற்றும் எதிர்க் கட்சி தலைவர்களை சந்தித்து மாநில அந்தஸ்து கோரிக்கையை வலியுறுத்தி மனு அளிக்கின்றனர்.

    ஆர்ப்பாட்டத்துக்கு டெல்லி சென்றுள்ள அரசியல் கட்சி தொண்டர்கள் தங்குவதற்கு விடுதி, உணவு, போக்குவரத்திற்கு பஸ் வசதி ஆகியவற்றை புதுவையை ஆளும் காங்கிரஸ் கட்சி செய்துள்ளது.

    ஆளும் கட்சிக்கு பிரச்சினைகள் ஏற்படும் போதெல்லாம் மாநில அந்தஸ்து விவகாரத்தை பெரிதுபடுத்துவதாக புதுவை சட்டமன்றத்தில் உள்ள பிரதான எதிர்க்கட்சிகள் என்.ஆர்.காங்கிரசும், அ.தி.மு.க.வும் குற்றம் சாட்டியது. அதோடு டெல்லி போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் எனவும் அறிவித்தன. இதன்படி என்.ஆர்.காங்கிரசும், அ.தி.மு.க.வும் டெல்லி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கவில்லை. #narayanasamy #kiranbedi

    Next Story
    ×