search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலையுண்ட ஜெகதீசன்-விலாசினி
    X
    கொலையுண்ட ஜெகதீசன்-விலாசினி

    கணவன்-மனைவி கொலை: கொலையாளி தம்பதி ஆந்திராவுக்கு ஓட்டம்

    ஆவடியில் நகை மற்றும் பணத்துக்காக கணவன், மனைவியை அடித்து கொலை செய்து தப்பிய ஓடிய கொலையாளி தம்பதியை பிடிக்க 3 தனிப்படை ஆந்திராவுக்கு விரைந்துள்ளது. #AvadiMurder
    திருநின்றவூர்:

    ஆவடியை அடுத்த அய்யன் நகர் சேக்காடுமெயின் ரோட்டில் உள்ள பண்ணை வீட்டில் வசித்து வந்தவர் ஜெகதீசன் (வயது 67). அண்ணா சாலையில் உள்ள அரசு அச்சகத்தில் சூப்பிரண்டாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    இவர் முதல் மனைவியை பிரிந்து அரசு அச்சகத்தில் வேலை பார்த்த கணவரை பிரிந்து வாழ்ந்த விலாசினியை (58) 2-வதாக திருமணம் செய்து இருந்தார்.

    இவர்களுக்கு குழந்தை இல்லை. வயதான தம்பதி இருவரும் பண்ணை வீட்டில் தனியாக வசித்து வந்தனர். கடந்த 1½ மாதத்துக்கு முன்பு விலாசினி பணி ஓய்வு பெற்றார்.

    அவர்கள் வீட்டு வேலை செய்வதற்காக ஆந்திராவை சேர்ந்த சுரேஷ், அவரது மனைவி லட்சுமி ஆகியோரை வீட்டில் தங்க வைத்தனர். அவர்களுக்கு வீட்டின் அருகே தனி அறை ஒதுக்கப்பட்டது. அவர்களுடன் ஒரு மகனும் இருந்தான்.

    இந்த நிலையில் நேற்று காலை ஜெகதீசனும், விலாசினியும் வீட்டில் உள்ள அறையில் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தனர். அறையில் இருந்த பீரோ உடைந்து கிடந்தது.

    மேலும் அங்கு தங்கி வேலை பார்த்து வந்த ஆந்திரா தம்பதி சுரேஷ்- லட்சுமி ஆகியோர் மகனுடன் தலைமறைவாகி இருந்தனர்.

    அவர்கள் ஜெகதீசனையும், விலாசினியையும் கொலை செய்து விட்டு நகை- பணத்தை கொள்ளையடித்து தப்பி இருப்பது தெரிந்தது.

    இது குறித்து ஆவடி போலீசார் விசாரணை நடத்தினர். கொலையாளிகளை பிடிக்க சென்னை கூடுதல் கமி‌ஷனர் தினகரன், இணை கமி‌ஷனர் விஜய்குமார் ஆகியோர் மேற்பார்வையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது.

    அவர்கள் தலைமறைவான சுரேசின் செல்போன் நம்பரை வைத்து விசாரணையை தொடங்கினர். இதில் அவன் கடந்த 24-ந் தேதி ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள ஒருவருக்கு பேசி இருப்பது தெரிந்தது. தற்போது சுரேசின் செல்போன் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு உள்ளது.

    எனவே அவன் குடும்பத்துடன் விஜயவாடா தப்பி சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றார்கள். இதையடுத்து தனிப்படை போலீசார் ஆந்திரா விரைந்து உள்ளனர்.

    சுரேஷ் கடைசியாக பேசிய நபர் யார்? என்ற விபரத்தை சேகரித்து வருகின்றனர்.

    கொலை நடந்த வீட்டில் எவ்வளவு நகை-பணம் கொள்ளை போனது என்று தெரியவில்லை. ஜெகதீசனின் வீட்டுக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்புதான் உறவினர்கள் வந்து சென்று இருக்கிறார்கள். அவர்களது வீட்டில் எவ்வளவு நகை-பணம் இருந்தது என்று யாருக்கும் தெரியவில்லை.

    ஜெகதீசன் கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஆந்திர தம்பதி சுரேஷ்-லட்சுமியை வீட்டு வேலைக்கு சேர்த்து உள்ளார். சுரேசை ஆவடியை சேர்ந்த மேஸ்திரி ஒருவர் அறிமுகப்படுத்தி இருந்தார். அவரிடமும் விசாரணை நடக்கிறது.

    சுரேஷ், வீட்டு வேலைக்கு வருவதற்கு முன்பு காமராஜர் நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் காவலாளியாக இருந்தார். இதன் பின்னரே ஜெகதீசன் வீட்டுக்குவேலைக்கு சேர்ந்து உள்ளார்.

    ஆரம்பத்தில் சுரேஷ் நன்றாக வேலை செய்வது போல் நடித்தார். இதனை நம்பிய ஜெகதீசன் சுரேசுடன் நன்கு பழகினார். இருவரும் சேர்ந்து மது குடிக்கும் அளவுக்கு நெருக்கமாகி உள்ளனர். வங்கி மற்றும் உறவினர் வீடுகளுக்கும் சுரேசை ஜெகதீசன் அழைத்து சென்று இருக்கிறார்.

    சில நாட்களுக்கு முன்பு காமராஜர் நகர் பகுதியில் உள்ள மது பாரில் 2 பேரும் சேர்ந்து மது குடித்து உள்ளனர். இந்த காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவாகி உள்ளது.

    சுரேஷ் நண்பர் போன்று பழகியதால் ஜெகதீசன் தனது குடும்ப விபரங்களை அவருடன் பகிர்ந்து இருக்கலாம் என்று தெரிகிறது.

    எனவே நகை-பணத்துக்கு ஆசைப்பட்டு ஜெகதீசனையும், அவரது மனைவியையும் கொலை செய்து ஆந்திர தம்பதி சுரேஷ்-லட்சுமி தப்பி சென்று இருப்பது விசாரணையில் தெரிய வந்து உள்ளது.

    கொலை திட்டத்தை அரங்கேற்றுவதற்கு முன்பு அவர்கள் ஜெகதீசன் வளர்த்த 2 நாய்களுக்கு மயக்க மருந்து கொடுத்து இருக்கிறார்கள். இதில் ஒரு நாய் மயங்கியது. ம ற்றொரு நாயை அவர்கள் அடித்து விரட்டி இருக்கிறார்கள். மயக்கமடைந்த நாய் நேற்று மதியம்தான் சகஜ நிலைக்கு திரும்பியது.

    இந்த கொலை சம்பவத்தில் ஆந்திர தம்பதியுடன் கூட்டாளிகள் வேறு சிலரும் சேர்ந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவர்கள் ரெயில் நிலையங்களில் இருந்து தப்பி சென்று இருக்கலாம் என்பது தெரிகிறது. இதையடுத்து ஆவடி, சென்ட்ரல் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். #AvadiMurder
    Next Story
    ×