search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கஜா புயல்: காரைக்கால் மாவட்டத்தில் 4-வது நாளாக இருளில் தவிக்கும் கிராம மக்கள்
    X

    கஜா புயல்: காரைக்கால் மாவட்டத்தில் 4-வது நாளாக இருளில் தவிக்கும் கிராம மக்கள்

    கஜா புயலால் காரைக்கால் மாவட்டத்தில் ஏராளமான மின் கம்பங்கள், மரங்கள் சாய்ந்து விழுந்துள்ளன. இதனால் மின் விநியோகம் 4-வது நாளாக தடைப்பட்டதால் பல கிராமங்கள் இருளில் மூழ்கின. #gajacyclone #darkness

    காரைக்கால்:

    ‘கஜா’ புயலால் காரைக்கால் மாவட்டத்தில் பலத்த சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. ஏராளமான மின் கம்பங்கள், மரங்கள் சாய்ந்து விழுந்தன. வீடுகள், படகுகள் சேதமடைந்தன. மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால் கடந்த 15-ந் தேதி முதல் மின் விநியோகம் தடைப்பட்டது. மாவட்டத்தில் பல கிராமங்கள் இருளில் மூழ்கின. பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்தனர்.

    இந்த நிலையில் மாவட்டத்தில் காரைக்கால், திருநள்ளாறு உள்ளிட்ட சில பகுதிகளில் சாய்ந்து விழுந்த மின்கம்பங்கள் சரி செய்யப்பட்டு மின் விநியோகம் செய்யப்பட்டது.

    ஆனால், நிரவி, தூதுபோன மூலை, மானாம்பேட்டை, ஓடுதுறை, விழுதியூர் உள்ளிட்ட 5 கிராமங்கள் மற்றும் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள நேருவீதி ஆகிய பகுதிகளுக்கு இன்னும் மின்சாரம் வழங்கப்படவில்லை. இதனால் அந்த பகுதி கடந்த 4 நாட்களாக இருளில் மூழ்கியுள்ளது.

    அங்கு வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். குடிநீர் பிரச்சினையும் நிலவி வருகிறது. அவர்கள் கடைகளுக்கு சென்று குடிநீர் கேன் வாங்கி பயன்படுத்தும் நிலைமை ஏற்பட்டுள்ளன.

    செல்போனுக்கு சார்ஜ் செய்ய முடியாமல் உறவினர்களுடன் தொடர்பு கொண்டு பேச முடியாத நிலையில் உள்ளனர்.

    புயலால் கீழே சாய்ந்து விழுந்த மின் கம்பங்களை சரி செய்யும் பணியில் மின் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று மாலைக்குள் மின்கம்பங்கள் சரி செய்யப்பட்டு மின் விநியோகம் வழங்கப்படும் என்று தெரிகிறது.

    ‘கஜா’ புயலால் வீட்டில் இருந்த ஏராளமான பொருட்கள் சேதமடைந்தன. அந்த பொருட்களை சாலையில் போட்டு செல்கின்றனர். தற்போது அதில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தொற்று நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது.

    இதனை சீர்படுத்த மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். புயலால் சாய்ந்து விழுந்த மரங்கள் வெட்டப்பட்டு சாலையோரம் குவித்து வைத்துள்ளனர். அதனை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #gajacyclone #darkness

    Next Story
    ×