search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விழாவில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் டேன்டீ தொழிலாளர் ஒருவருக்கு பணிக்கொடை வழங்கியபோது எடுத்தபடம்.
    X
    விழாவில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் டேன்டீ தொழிலாளர் ஒருவருக்கு பணிக்கொடை வழங்கியபோது எடுத்தபடம்.

    குன்னூர் அரசு விழாவில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் வேலை கேட்ட தொழிலாளி

    குன்னூரில் நடைபெற்ற அரசு விழாவில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் தொழிலாளி வேலை கேட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #ADMK #TNMinister #DindigulSreenivasan
    குன்னூர்:

    டேன்டீ நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு போனஸ் மற்றும் பணப்பலன்கள் வழங்கும் விழா குன்னூர் டேன்டீ டைகர்ஹில் தேயிலை தொழிற்சாலை வளாகத்தில் நடைபெற்றது.

    வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சக செயலாளரும், டேன்டீ தலைவருமான சம்புகலோலிக்கர் தலைமை தாங்கினார். இதில் தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு தொழிலாளர்களுக்கு போனஸ் மற்றும் பணப்பலன்களை வழங்கினார்.

    விழாவில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-

    தாயகம் திரும்பிய தமிழர்களுக்காக டேன்டீ நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. தேயிலை சந்தையில் விலை வீழ்ச்சி ஏற்பட்டபோது அதில் சிக்கி டேன்டீ நிர்வாகமும் நஷ்டம் அடைந்தது. இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் முனைப்புடன் செயல்பட்டு நிறுவனத்தை லாபகரமாக நடத்தினால் தான் இந்த நிறுவனம் நல்ல முறையில் இயங்கும். தமிழக முதல்வரின் முயற்சியினால் தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்பட்டு உள்ளது.

    தமிழக நிதி அமைச்சகம் 10 சதவீதம் தான் போனஸ் வழங்க நிதி ஒதுக்க முடியும் என்று அறிக்கை கொடுத்தார்கள். ஆனால் தமிழக முதல்வரின் தலையீட்டின் பேரில் 20 சதவீத போனஸ் வழங்கப்பட்டு உள்ளது. தமிழக முதல்வரிடம் பேசி டேன்டீ நிறுவனத்திற்கு ரூ.60 கோடி நிதி விடுவிக்கப்பட்டு உள்ளது.

    கூடலூர் பகுதியில் தேக்கு, மூங்கில் உள்ளிட்ட மரங்களை வளர்க்கும் பட்சத்தில் யானை உள்ளிட்ட வனவிலங்குகளிடமிருந்து மக்களை பாதுகாக்கலாம் என்ற யோசனை வரவேற்கத்தக்கது. இது குறித்து பரிசீலிக்கப்படும். தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் ரூ.13 கோடியே 9 லட்சம் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பணிக்கொடை வழங்க ஒதுக்கப்பட்டு உள்ளது. ரூ.6 கோடி நடைமுறை மூலதன செலவிற்கும், ரூ.12 கோடி வங்கி கடனை அடைக்கவும், ரூ.12 கோடியே 15 லட்சம் உரமிடுவதற்கும் செலவிடப்படும். மேலும் ரூ.4 கோடியே 41 லட்சம் தொழிலாளர்களுக்கு குடியிருப்பு கட்டுவதற்கும், எந்திரங்கள் வாங்குவதற்கு ரூ.2 கோடியே 30 லட்சம் விடுவிக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனைதொடர்ந்து வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொழிலாளர்கள் தங்களுடைய குறைகளை தெரிவித்தால் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அப்போது ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் சிலர் குறைகளை தெரிவித்தனர். இந்தநிலையில் விஜயரத்தினம் என்ற தொழிலாளி தனது மகளுக்கு வேலைகொடுக்க அதிகாரிகள் மறுப்பதாக புகார் கூறினார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதனைதொடர்ந்து அ.தி.மு.க. நிர்வாகிகள் விஜயரத்தினத்தை மேடைக்கு அருகில் இருந்து அப்புறப்படுத்த முயற்சித்தனர். ஆனால் அமைச்சர் அவர்களை தடுத்து வேலை வேண்டுமென்றால் முறைப்படியாக மனு கொடுக்க வேண்டும். அதுவும் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அப்போது தான் மனு பரிசீலிக்கப்படும் என்று கூறினார். #ADMK #TNMinister #DindigulSreenivasan

    Next Story
    ×