search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கன்னியாகுமரியில் அலங்கார உபகார மாதா ஆலயத்தில் 10 பவுன் தங்க நகை கொள்ளை
    X

    கன்னியாகுமரியில் அலங்கார உபகார மாதா ஆலயத்தில் 10 பவுன் தங்க நகை கொள்ளை

    கன்னியாகுமரியில் புகழ் பெற்ற புனித அலங்கார உபகார மாதா ஆலயத்தில் 10 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் புகழ் பெற்ற புனித அலங்கார உபகார மாதா திருத்தலம் அமைந்து உள்ளது. இந்த ஆலயம் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது. இந்த ஆலயத்தின் கோபுர உச்சியில் பெரிய தங்க சிலுவையும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ஆலயத்திற்கு குமரி மாவட்டம் மட்டும் இன்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வந்து பிரார்த்தனை செய்து செல்வார்கள். கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளும் இங்கு வருகை தருவார்கள்.

    நேற்று இரவு இந்த ஆலயத்தில் திருப்பலி நடைபெற்ற பிறகு 8.30 மணி அளவில் ஆலயத்தை பூட்டி விட்டு ஊழியர்கள் சென்று விட்டனர்.

    இன்று அதிகாலையில் ஆலயத்தை திறப்பதற்காக ஊழியர் வந்தார். ஆலயத்தை திறந்து உள்ளே சென்ற அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த ஆலயத்தில் மாதா சொரூபம் வைக்கப்பட்டு உள்ள கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் மாதா சொரூபத்தில் அணிவிக்கப்பட்டு இருந்த ஒரு தங்க செயின், 4 தங்க வளையல்கள், ஒரு தங்க பிரேஸ்லெட் போன்றவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதன் மொத்த மதிப்பு 10 பவுன் ஆகும்.

    இந்த தகவல் பரவியதும் அந்த பகுதியை சேர்ந்த திரளான மக்கள் ஆலயத்தில் திரண்டதால் அங்கு பரபரப் பான சூழ்நிலை உருவானது. மேலும் இந்த துணிகர கொள்ளை பற்றி கன்னியாகுமரி போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

    போலீஸ் டி.எஸ்.பி. முத்துப்பாண்டியன், இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் அந்த ஆலயத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அந்த ஆலயத்தில் 5 கண்காணிப்பு கேமிராக்களும் வைக்கப்பட்டு உள்ளது.

    இதில் 3 கேமிராக்கள் துணியால் மூடப்பட்டு காட்சி அளித்தது. 2 கேமிராக்களில் மட்டும் கொள்ளை நடந்த காட்சி பதிவாகி இருந்தது தெரியவந்தது.


    அந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது இரவில் ஆலயத்தை பூட்டியபோது ஆலயத்திற்குள் ஒரு வாலிபர் பதுங்கிக்கொண்டதும், அவர் கண்ணாடியை உடைத்து நகைகளை கொள்ளையடிப்பதும் கேமிராவில் பதிவாகி இருந்தது. கொள்ளையனுக்கு சுமார் 30 வயது இருக்கும். பேண்ட், சர்ட் அணிந்து உள்ளார்.

    மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் காலையில் ஆலயத்தை திறந்தபோது அந்த கொள்ளையன் யாருக்கும் தெரியாமல் தப்பிச் சென்று இருக்கலாம் என்பது தெரிய வந்தது.

    தடயவியல் நிபுணர்கள், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. துணிகர நகை கொள்ளையில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    Next Story
    ×