search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பனியன் நிறுவன உரிமையாளர்கள் பேரில் போலி ஆவணம் தயாரித்து ரூ.18 கோடி மோசடி செய்த கணவன், மனைவி கைது
    X

    பனியன் நிறுவன உரிமையாளர்கள் பேரில் போலி ஆவணம் தயாரித்து ரூ.18 கோடி மோசடி செய்த கணவன், மனைவி கைது

    திருப்பூரில் பனியன் நிறுவன உரிமையாளர்கள் பேரில் போலி ஆவணம் தயாரித்து ரூ.18 கோடி மோசடி செய்த கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர்.
    திருப்பூர்:

    திருப்பூர்காவிப் பாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி (59). பனியன் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். ஆடைகள் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். இந்த நிறுவனத்திற்கு டைமண்ட் தியேட்டர் அருகே உள்ள வங்கி கிளையில் கணக்கு உள்ளது.

    கடந்த சில மாதங்களுக்கு முன் ராமசாமி வங்கிக்கு சென்ற போது அவரது கணக்கில் ரூ. 3 கோடியே 92 லட்சத்து 78 ஆயிரத்து 768 ரூபாய் கடன் இருப்பதாக வங்கி ஊழியர்கள் தெரிவித்தனர்.

    இதனால் ராமசாமி அதிர்ச்சி அடைந்தார். தான் கடன் எதுவும் வாங்கவில்லை என அதிகாரிகளிடம் கூறினார். இதே போல் திருப்பூர் அருள் புரத்தில் உள்ள பனியன் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்க்கும் சிவபிரகாசம் என்பவரும் இதே வங்கியில் இருந்து ரூ. 6 கோடியே 12 லட்சம் கடன் வாங்கி இருப்பதாக வங்கியில் இருந்து தகவல் வந்தது.

    அவரும் வங்கியில் கடன் எதுவும் வாங்க வில்லை என தெரிவித்தார். இந்த நிலையில் திருப்பூரில் பனியன் நிறுவனம் நடத்தி வரும் ஹாரூண் ரஷித் என்பவர் இதே வங்கியில் ரூ. 5 கோடி கடன் கேட்டு உள்ளார்.அவருக்கு வங்கி நிர்வாகம் கடன் வழங்கி உள்ளது. ஆனால் ரூ. 5 கோடி கடனுக்கு ஹாரூண் ரஷித் ரூ. 8 கோடியே 34 லட்சம் கடன் பெற்றதாக வங்கியில் இருந்து தகவல் வந்துள்ளது.

    வங்கியால் ஏமாற்றப்பட்ட ராமசாமி, சிவபிரகாசம், ஹாருண் ரஷித் ஆகியோர் இந்த மோசடி தொடர்பாக திருப்பூர் மாநகர போலீஸ் கமி‌ஷனர் மனோகரனிடம் புகார் அளித்தனர்.

    இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கமி‌ஷனர் உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதன்படி மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    அப்போது இந்த மோசடியில் ஈடுபட்டது திருப்பூர் சிவசக்தி நகர் செந்தில் குமார் (35), அவரது மனைவி பிரியா (31) என்பது தெரிய வந்தது.

    இவர்களுக்கு உடந்தையாக கிருஷ்ண கிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்த ராஜேஷ் கண்ணாவும் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    இவர்கள் 3 பேரும் போலி ஆவணம் தயாரித்து பனியன் அதிபர்கள் பெயரில் வங்கியில் கடன் வாங்கி உள்ளது தெரிய வந்தது.

    இந்த மோசடிக்கு வங்கி மேலாளர் சோமாயாஜி, உதவி பொது மேலாளர் அனந்த் நாயக், சீனியர் மேலாளர் சங்கர், துணை பொது மேலாளர் பத்மா ரெட்டி ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். இவர்கள் மோசடி பணத்தில் 5 சதவீதம் வரை கமி‌ஷன் பெற்று இருப்பதும் குற்றப்பிரிவு போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

    இது தொடர்பாக வங்கி மேலாளர் சோமாயாஜியை போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். போலி ஆவணம் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட செந்தில் குமார், அவரது மனைவி பிரியா, இவர்களுக்கு உதவிய ராஜேஷ் கண்ணா ஆகியோரை போலீசார் தேடி வந்தனர்.

    அவர்களில் தற்போது செந்தில் குமார், பிரியா ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். ராஜேஷ் கண்ணா தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    இதற்கிடைய வங்கி அதிகாரிகள் ஆனந்த் நாயக், சங்கர், பத்மா ரெட்டி ஆகியோர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். அவர்களை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த சோமாயாஜி தலைமறைவாகி உள்ளார். அவரை தேடும் பணியும் நடைபெற்று வருகிறது. #tamilnews
    Next Story
    ×