search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சூறையாடப்பட்ட ஓட்டுப்பெட்டி.
    X
    சூறையாடப்பட்ட ஓட்டுப்பெட்டி.

    கூட்டுறவு சங்க தேர்தலில் மோதல்-ஓட்டுப்பெட்டி உடைப்பு: ஓ.பன்னீர்செல்வம்-உதயகுமார் ஆதரவாளர்கள் மீது வழக்கு

    கூட்டுறவு சங்க தேர்தலில் ஏற்பட்ட மோதல் காரணமாக துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆதரவாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #CooperativeSocietyElection #OPanneerSelvam

    பேரையூர்:

    மதுரை மாவட்டம், திருமங்கலம் புதுநகரில் கூட்டுறவு வீட்டு வசதி சங்க கட்டிட வங்கி செயல்பட்டு வருகிறது. இதில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் திருமங்கலம் நகர்மன்ற முன்னாள் தலைவர் சிரஞ்சன் உள்பட 7 பேரும், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆதரவாளர்களான அழகர் உள்பட 4 பேரும் நிர்வாகக்குழு உறுப்பினர்களாக தேர்வு பெற்றனர்.

    இதனைத்தொடர்ந்து தலைவர், துணைத்தலை வருக்கான தேர்தல் கடந்த 21-ந் தேதி நடைபெற்றது. அப்போது நிரஞ்சனின் சகோதரரான தி.மு.க. நகர பொறுப்பாளர் முருகன், வங்கியின் கேட்டை உடைத்து தகராறில் ஈடுபட்டார்.

    இதன் காரணமாக சட்டம்-ஒழுங்கை காரணம் காட்டி, தேர்தலை 24-ந் தேதிக்கு தேர்தல் அதிகாரி அறிவரசு கண்ணன் தள்ளி வைத்தார்.

    இதற்கிடையே நிரஞ்சன் தரப்பினர் தேர்தலை நடத்த வலியுறுத்தி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த நிலையில் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தலைவர், துணைத்தலைவர் தேர்தல் நடத்தப்பட்டது.

    தேர்தல் அதிகாரி அறிவரசு கண்ணன் மற்றும் அதிகாரிகள் தேர்தலை நடத்தினர்.

    பகல் 12 மணியளவில் அ.தி.மு.க.வின் ஒரு தரப்பைச் சேர்ந்தவர்கள் திடீரென வங்கி அலுவலகத்திற்குள் புகுந்தனர். அவர்கள் அங்கிருந்த ஓட்டுப்பெட்டியை அடித்து உடைத்து சேதப்படுத்தினர்.

    வாக்குச்சீட்டுகளையும் கிழித்து எறிந்தனர். இதனால் பயந்த தேர்தல் அதிகாரிகள் அங்கிருந்து ஓடிவிட்டனர். அதன் பிறகு வங்கியும் பூட்டப்பட்டது.

    அழகர் அணியினர் தான் இந்த செயலில் ஈடுபட்டதாக கூறி, நிரஞ்சன் தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் திருமங்கலத்தில் பதற்றம் ஏற்பட்டது.

    சம்பவம் குறித்து திருமங்கலம் போலீசில் தேர்தல் அதிகாரி அறிவரசு கண்ணன் புகார் செய்தார்.

    அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார், அழகர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    இதே போல் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் புகாரின் பேரில் சாலை மறியலில் ஈடுபட்ட நிரஞ்சன் உள்பட 19 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கூட்டுறவு சங்கத்தேர்தல் மோதல் தொடர்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பது அ.தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×