search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாமிரபரணி ஆற்று மண்டபம்-படித்துறைகளை புதுப்பிக்க கோரிய வழக்கு: மத்திய-மாநில அரசுகளுக்கு நோட்டீசு
    X

    தாமிரபரணி ஆற்று மண்டபம்-படித்துறைகளை புதுப்பிக்க கோரிய வழக்கு: மத்திய-மாநில அரசுகளுக்கு நோட்டீசு

    மகாபுஷ்கர விழா தொடங்குவதற்கு முன்பு தாமிரபரணியில் உள்ள மண்டபங்கள், படித்துறைகளை புதுப்பிக்க கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்ற மதுரைகிளை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. #MaduraiHCBranch
    மதுரை:

    தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரைச் சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தாமிரபரணி மகா புஷ்கர திருவிழா அக்டோபர் 12 முதல் 21 வரை நடைபெறுகிறது. புஷ்கர விழாவுக்கான ஆரம்ப கட்டப்பணிகள் தொடங்கியுள்ளது. குறுக்குத்துறை கோவில் அருகே தாமிரபரணி தாய் கோவில் கட்டும் பணியும் நடைபெறுகிறது.

    தாமிரபரணியில் 144 தீர்த்த கட்டிடங்கள் உள்ளன. இவைகள் ஒவ்வொன்றும் புராண வரலாறு கொண்டவை. இந்த படித்துறைகளும், மண்டபங்களும் இடிந்தும், புதர் மண்டியும் இருக்கின்றன. சாக்கடை நீர் நேரடியாக ஆற்றில் விடப்படுகிறது.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 15 இடங்களில் மகாபுஷ்கர திருவிழா கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் தாமிரபரணியை சுத்தம் செய்யவும், மண்டபங்கள், படித்துறைகளை பராமரிக்கவும், சாக்கடை நீர் கலப்பதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    எனவே புஷ்கர விழா தொடங்குவதற்கு முன்பு தாமிரபரணியில் உள்ள அனைத்து மண்டபங்கள், படித்துறைகளை புதுப்பிக்கவும், கழிவுநீர் கலப்பதை தடுக்கவும், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாமல் புஷ்கர விழாவை கொண்டாடவும் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மனு இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், சதீஷ்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இதுகுறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கினை செப்டம் பர் 10-ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர். #MaduraiHCBranch
    Next Story
    ×