search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தே.மு.தி.க. பிரமுகர் கொலை: கள்ளக்காதல் விவகாரத்தில் மேலும் 2 பேரை கொன்ற கூலிப்படை
    X

    தே.மு.தி.க. பிரமுகர் கொலை: கள்ளக்காதல் விவகாரத்தில் மேலும் 2 பேரை கொன்ற கூலிப்படை

    சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே தே.மு.தி.க. பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேரை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
    சேலம்:

    சேலம் மாவட்டம் தலைவாசலை அடுத்த புத்தூர் வடக்குகாடு கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி (வயது 45). டிரைவர். தே.மு.தி.க. கிளை செயலாளராகவும் இருந்து வந்தார். இவரது மனைவி ஆலயமணி (வயது 30). இவர்களுக்கு ராம்குமார்(16), அருண்குமார்(14) என 2 மகன்கள் உள்ளனர்.

    கடந்த 17-ந்தேதி தனது மனைவி, 2 மகன்களையும் திருநள்ளாறு கோவிலுக்கு வாடகை காரில் அனுப்பி வைத்தார். அதன் பிறகு அவர் தோட்டத்து வீட்டில் தங்கியிருந்தார். மறுநாள் காலை வெகுநேரமாகியும் கலியமூர்த்தி வீட்டை விட்டு வெளியே வரவில்லை. கதவு திறந்து கிடந்தும் பசுமாட்டிற்கு பால் கறக்க அவர் வராததால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டை சேர்ந்த காங்கம்மாள் என்பவர் கலியமூர்த்தி வீட்டுக்கு சென்று பார்த்தார். அங்கே உடல் முழுவதும் பலத்த வெட்டு காயங்களுடன் நிர்வாண கோலத்தில் கலியமூர்த்தி பிணமாக கிடந்தார்.

    இந்த கொலை சம்பவம் குறித்து தலைவாசல் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கூலிப்படை வைத்து ஆலயமணியே தனது கணவரை தீர்த்துக் கட்டியிருப்பது தெரியவந்தது. விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதன் விபரம் வருமாறு:-

    ஆலயமணி மகளிர் சுய உதவிக்குழுவில் இருக்கிறார். இதனால் கடன் வி‌ஷயமாக பல்வேறு இடங்களுக்கு சென்று வந்தார். அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதிக்கு சென்றபோது, அங்கு சுற்றுலா வேன் ஓட்டும் டிரைவரான ஏமாத்தேர் கிராமத்தை சேர்ந்த தேன்குமார் (32) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

    ஜவுளிக்கடையில் துணி எடுப்பதற்காக அடிக்கடி ஆலயமணி கள்ளக்குறிச்சி சென்றார். அவரை அங்கு தேன்குமார் தனது வேனில் அழைத்துகொண்டு ஜவுளி கடைகளுக்கு செல்வதோடு மட்டுமின்றி பல இடங்களுக்கு அழைத்து சென்று இருவரும் உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது.

    ஆலயமணி தனது கணவர் வீட்டில் இல்லாதபோது கள்ளக்காதலன் தேன்குமாரை புத்தூரில் உள்ள தோட்டத்து வீட்டுக்கு வரவழைத்து உல்லாசமாக இருந்துள்ளார். இவர்களது பழக்கம் அக்கம், பக்கத்தினர் மூலமாக கணவர் கலியமூர்த்திக்கு தெரியவந்தது. இதனால் கலியமூர்த்தி தனது மனைவியை கண்டித்தார். மகளிர் சுய உதவிக்குழுவில் இருந்த மனைவி நிறைய கடன் வாங்கி இருப்பதை அறிந்து எதற்காக? கடன் வாங்கினாய் என்று விசாரித்தபோது, அவர் தனது கள்ளக்காதலன் தேன்குமாருக்கு கடன் வாங்கி கொடுத்தது தெரியவந்தது. உடனே கலியமூர்த்தி, தேன்குமாரிடம் பணத்தை திரும்ப தருமாறு கேட்டுள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் தேன் குமாருடன் நெருங்கி பழகுவதை தனது கணவர் தடுத்து வந்ததால் ஆத்திரம் அடைந்த ஆலயமணி அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். இது குறித்து கள்ளக்காதலனிடம் கூறினார். தேன்குமார் தனது ஊரை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (19) மற்றும் 17 வயது சிறுவனை அழைத்து வந்து கலியமூர்த்தியை கொலை செய்தார்.

    இதற்காக கூலிப்படையை சேர்ந்த ஹரிகிருஷ்ணனுக்கு ரூ.1 லட்சம் தருவதாக ஆலயமணி கூறி இருக்கிறார். மற்றொரு வாலிபருக்கு தனது கணவர் பயன்படுத்தி வந்த சரக்கு ஆட்டோவை தருவதாக கூறி கலியமூர்த்தியை கொலை செய்யதிட்டம் வகுத்து கொடுத்துள்ளதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

    இதில் ஹரிகிருஷ்ணனும், 17 வயது சிறுவனும் போலீசாரிடம் பிடிப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.

    ஆலயமணியுடன் தொடர்பில் இருந்த 2 பேர் ஏற்கனவே மர்மமான முறையில் இறந்துள்ளனர். ஆலயமணியுடன் ஏற்கனவே கள்ளத்தொடர்பில் இருந்த தலைவாசலை சேர்ந்த ஒருவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன் மர்மமான முறையில் இறந்துள்ளார். தூக்குமாட்டி தற்கொலை செய்ததுபோல் தொங்க விடப்பட்டிருந்தது. அது தற்கொலை வழக்காக போலீசில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல் மற்றொரு வாலிபர் சாலையில் நடந்து சென்றபோது வாகனம் மோதியது. இதில் அவர் இறந்தார். வாகனத்தை ஏற்றி கொலை செய்துவிட்டு விபத்து நடந்தது போல் மாற்றியதாக கூறப்படுகிறது. இந்த 2 வழக்குகளையும் தற்போது எடுத்து மீண்டும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    முக்கிய குற்றவாளியான கள்ளக்காதலன் குமார் பிடிப்பட்டால் தான் மேலும் பல தகவல்கள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.
    Next Story
    ×