search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூட்டத்தில் நிர்வாகிகள் நாற்காலிகளை வீசி தாக்கிக்கொண்ட காட்சி.
    X
    கூட்டத்தில் நிர்வாகிகள் நாற்காலிகளை வீசி தாக்கிக்கொண்ட காட்சி.

    திண்டுக்கல்லில் டி.டி.வி. தினகரன் அணி ஆலோசனை கூட்டத்தில் அடிதடி

    திண்டுக்கல்லில் டி.டி.வி. தினகரன் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் இரு தரப்பினர் மோதிக்கொண்டு நாற்காலிகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. #TTVDhinakaran #MLAsDisqualified

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்திற்கு வருகிற 26-ந் தேதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலாளர் தினகரன் வருகிறார். அவருக்கு வரவேற்பு அளிப்பது தொடர்பாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது.

    கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். கூட்டத்தில் மாநகர மாவட்ட செயலாளர் ராமுத்தேவர், மேற்கு மாவட்ட செயலாளர் நல்லசாமி, கிழக்கு மாவட்ட செயலாளர் தங்கத்துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் தங்கத்துரை பேச ஆரம்பித்தார். அப்போது மாவட்ட நிர்வாகிகள் பலரது பெயரை சொல்லாமல் தனக்கு வேண்டியவர்கள் பெயரை மட்டும் கூறினார்.

    இதனால் மற்றொரு தரப்பினர் அவரை பேச விடாமல் கூச்சலிட்டனர். இதனையடுத்து தங்கத்துரை ஆதரவாளர்கள் அவர்களை அமருமாறு எதிர்த்து கோ‌ஷமிட்டனர்.

    சிறிது நேரத்தில் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதுடன் நாற்காலிகளையும் வீசினர். தங்கதமிழ்ச்செல்வன் முன்னிலையிலேயே இரு தரப்பினரும் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    கூட்டடத்தில் கலந்து கொள்ள வந்த பெண்கள் அலறியடித்து மண்டபத்தை விட்டு ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு போலீசார் கூடுதலாக வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அதன்பிறகு தங்கத்துரை தனது ஆதரவாளர்களுடன் மண்டபத்தை விட்டு வெளியேறினார்.

    கடந்த மாதம் செம்பட்டியில் நடந்த அ.ம.மு.க. நிர்வாகிகள் கூட்டத்திலும் இரு தரப்பினர் மோதிக்கொண்டனர். தங்கதமிழ்ச்செல்வன் தலையிட்டு அவர்களை சமாதானம் செய்தும் கேட்கவில்லை.

    திண்டுக்கல் மாவட்டத்தில் அ.ம.மு.க. இரு கோஷ்டிகளாக செயல்பட்டு வருவதால் இது குறித்து கட்சி தலைமையிடம் எடுத்து கூறி குழப்பத்தை ஏற்படுத்தும் நிர்வாகிகள் நீக்கப்படுவார்கள் என்று தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

    Next Story
    ×