search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கே.ஆர்.எஸ். அணை
    X
    கே.ஆர்.எஸ். அணை

    காவிரியில் வினாடிக்கு 1.75 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் வினாடிக்கு 1.75 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் காவிரி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. #Hogenakkal #Cauvery
    பென்னாகரம்:

    கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் வினாடிக்கு 2 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் காவிரி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்). அணைக்கு நீர்வரத்து திடீரென்று அதிகரித்தது. இதையடுத்து நேற்று மாலை 5 மணி நிலவரப்படி கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 23 மதகுகள் வழியாக வினாடிக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

    இதேபோல் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 55 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து வினாடிக்கு 2 லட்சம் கனஅடி தண்ணீர் தமிழகத்துக்கு காவிரியில் கரைபுரண்டு ஓடியது.

    இன்று காலை நிலவரப்படி கே.ஆர்.எஸ் அணையிலிருந்து 1.20 லட்சம் கனஅடியும், கபிணி அணையிலிருந்து 50 லட்சம் கனஅடியும் திறக்கப்படுகிறது.

    சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகாவில் உலக புகழ்பெற்ற ஜோக் நீர்வீழ்ச்சி உள்ளது. இந்த நீர்வீழ்ச்சி 830 அடி உயரத்தில் அமைந்துள்ளது. கனமழை காரணமாக லிங்கனமக்கி அணை நிரம்பியதால் அதில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இதனால், ஜோக் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. 4 ஆண்டுகளுக்கு பிறகு ஜோக் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுவதால் அங்கு சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று காலை 9 மணி நிலவரப்படி வினாடிக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. கர்நாடக அணைகளில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டதால் ஒகேனக்கலுக்கு நேற்று மாலை 5 மணி நிலவரப்படி வினாடிக்கு 1 லட்சத்து 90 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இதனால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    ஐந்தருவி இருப்பதே தெரியாத அளவிற்கு தண்ணீர் செல்கிறது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் அதிக அளவில் செல்கிறது. மெயின் அருவி, சினிபால்சில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும் காவிரி கரையோரத்தில் இருந்த 6 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து அங்கு குடியிருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். நீர்வரத்து அதிகரித்துக்கொண்டே இருப்பதால் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் எனவும், காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தண்டோரா மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம்

    ஒகேனக்கல்லுக்கு அதிக அளவில் தண்ணீர் வந்த ஆண்டுகள் விவரம் வருமாறு:-

    1961- வினாடிக்கு 3 லட்சம் கனஅடி.

    2005-வினாடிக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் கனஅடி.

    2013-வினாடிக்கு 1 லட்சத்து 80 ஆயிரம் கனஅடி.

    2018-வினாடிக்கு 1 லட்சத்து 90 ஆயிரம் கனஅடி.

    ஒகேனக்கல்லில் இருந்து சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நேற்று மதியம் 2 மணிக்கு வினாடிக்கு 1 லட்சத்து 35 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. அணையில் இருந்து 1 லட்சத்து 40 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. நேற்று இரவு அணைக்கு வினாடிக்கு 1 லட்சத்து 55 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதையடுத்து அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 60 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது.

    மேட்டூர் அணை உபரிநீர் போக்கியான 16 கண் பாலத்தின் வழியாகவும் தண்ணீர் திறக்கப்பட்டதால் உபரிநீர் வெளியேறும் பாதை அருகே அமைந்துள்ள வீடுகளை காவிரி வெள்ளம் சூழ்ந்தது. எனவே காவிரி கரையோர பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    காவிரி பாயும் திருச்சி, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களிலும் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

    இன்று காலை நிலவரப்படி கே.ஆர்.எஸ் அணை, கபிணி அணையிலிருந்து  1.75 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. #Hogenakkal #Cauvery
    Next Story
    ×