search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சையில் இன்று பயங்கரம்- 18 வீடுகள் தீ விபத்தில் சேதம்
    X

    தஞ்சையில் இன்று பயங்கரம்- 18 வீடுகள் தீ விபத்தில் சேதம்

    தஞ்சை மேட்டு எல்லையம்மன் கோவில் தெரு பகுதியில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 18 வீடுகள் எரிந்து சாம்பலானது. சிலிண்டர்கள் வெடித்து சிதறின. பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமானது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே ஆப்ரகாம் பண்டிதர் சாலை அருகில் அமைந்துள்ளது மேட்டு எல்லையம்மன் கோவில் தெரு. இங்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. அதிகளவில் கூரை வீடுகள் உள்ளன. அனைத்து வீடுகளும் அடுத்தடுத்து நெருக்கமாக அமைந்துள்ளது.

    இந்நிலையில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் கூரையில் லேசான தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் தீ மளமளவென கொளுந்து விட்டு எரிந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த வீட்டின் உரிமையாளர் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து கூச்சலிட்டார். பின்னர் காற்றின் வேகத்தில் தீ அருகில் உள்ள வீடுகளுக்கும் பரவத் தொடங்கியது. அப்போது ஒரு வீட்டில் இருந்த சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியது.

    இதனால் அடுத்தடுத்த வீடுகளிலும் குபீரென தீப்பற்றியது. இதனால் தீயை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது அடுத்தடுத்த வீடுகளில் உள்ள சிலிண்டர்களும் வெடித்து சிதறியதால் அப்பகுதியே ஒரே களேபரமானது. இதனால் அந்த பகுதியில் பயங்கர சத்தம் கேட்டது.

    சத்தம் கேட்டதும் அருகில் உள்ள பகுதி மக்கள் அங்கு வந்து குவிந்தனர். உடனே அங்கு இருந்த இளைஞர்கள், பொதுமக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீ கொளுந்துவிட்டு எரிந்ததால் வீட்டின் அருகே யாராலும் செல்ல முடியவில்லை.

    இதனால் பக்கத்து வீட்டுகாரர்கள் உடனடியாக வெளியேறினர். சிலிண்டர்களை வீடுகளில் இருந்து வெளியில் கொண்டு வந்து சாலைகளில் போட்டனர்.

    உடனே இது குறித்து தஞ்சை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் உதவி மாவட்ட அலுவலர் இளஞ்செழியன், நிலைய அலுவலர் திலகர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் 2 வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    உடனே அவர்கள் தண்ணீரை பீச்சி அடித்து சுமார் 2½ மணி நேரம் பேராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் தகவலறிந்து டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன், தஞ்சை கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மற்றும் போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

    பின்னர் அவர்கள் விசாரணை நடத்தியதில் அந்த பகுதியை சேர்ந்த 1.பாலகிருஷ்ணன், 2.பால்ராஜ், 3.நாகராஜ், 4.சண்முகம், 5.ராஜா, 6.ராமகிருஷ்ணன், 7.கேசவன், 8.ராகவன், 9.தேவேந்திரன், 10.சரவணன், 11.ராமு, 12.கணேசன், 13.கிரி, 14.மாரிசாமி ஆகியோரின் வீடுகள் உள்பட 18 வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.

    இதில் பாலகிருஷ்ணன், பால்ராஜ், சண்முகம், மாரிசாமி, நாகராஜ், ராமகிருஷ்ணன் ஆகியோரின் வீடுகளில் உள்ள பொருட்கள் முழுவதும் எரிந்து நாசமானது. யார் வீட்டில் முதலில் தீ விபத்து ஏற்பட்டது. சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? என்று போலீசார் விசாரணை நடத்த வருகின்றனர்.

    தீ விபத்து ஏற்பட்ட வுடன் வீட்டில் வசிப்பவர்கள் உடனடியாக வீட்டை விட்டு வெளியே வந்து விட்டதால் எந்த வித உயிர் பலி அசம்பாவிதங்கள் நடக்க வில்லை. ஆனால் தீ கொளுந்து விட்டு எரிந்ததால் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் கருகி விட்டன.

    இதனால் ரேசன் கார்டு, ஆதார்அட்டை, சான்றிதழ்கள் என முக்கிய ஆவணங்களும் தீயில் எரிந்து சேதமானது. மேலும் பீரோ, துணிகள், பணம் என்று அனைத்தும் தீயில் கருகின. இதனை கண்டு பெண்கள் கதறி அழுதனர். இதனால் அந்த பகுதியே சோகத்தில் மூழ்கியது.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    இந்த பகுதியில் இன்று காலையில் பயங்கர சத்தம் கேட்டது உடனே தூங்கி கொண்டிருந்த நாங்கள் வெளியே வந்து பார்த்தோம். அப்போது வீடுகள் தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த நாங்கள் எங்கள் வீடுகளில் உள்ள தண்ணீரை எடுத்து தீயை அணைக்க முயற்சி செய்தோம் ஆனால் முடியவில்லை. 4 வீடுகளில் சிலிண்டர் வெடித்ததால் தீ பெரிய அளவில் பற்றி எரிந்தது. பின்னர் தான் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தோம். அவர்கள் வந்து தீயை அணைத்தனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன் உணவு வழங்கி ஆறுதல் கூறினார்.

    Next Story
    ×